தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் சார்பில் ரூ.45.46 லட்சம் செலவில் நீர் விளையாட்டு மையம் உள்ளிட்ட ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசு தின விழாவில் துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 74-வது குடியரசு தினவிழா நடைபெற்றது. துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்புப் படை, துறைமுக பள்ளி மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில் அவர் பேசிய துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன், "துறைமுகத்தில் சரக்கு கையாளுவதற்கு தேவையான உள்கட்டமைப்பு திட்டப்பணிகளான துறைமுக நுழைவு வாயிலை தற்போதுள்ள 153 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி, பொது சரக்குதளம் 9-ஐ சரக்குபெட்டக முனையமாக மாற்றுதல், நிலக்கரி தளம் - 1 மற்றும் 2, வடக்கு சரக்குதளம் 1-ல் கன்வேயர் இணைப்பு ஏற்படுத்துதல், வடக்கு சரக்குதளம் 3-ஐ இயந்திரமயமாக்கல் மற்றும் ஆழப்படுத்தும் பணி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் துறைமுகத்தில் 400 கிலோவாட் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையம், 5 மெகாவாட் தரைதள சூரிய மின் நிலையம் மற்றும் 2 மெகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தி போன்ற பல்வேறு திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் போது புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மூலம் பெறப்படும் முழு மின் ஆற்றலை கொண்டு துறைமுகத்துக்கு தேவையான மின் ஆற்றலை பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம் முழுமையாக புதுபிக்கப்பட்ட மின் ஆற்றலை கொண்டு செயல்படும் இந்தியாவின் முதல் பெருந்துறைமுகமாகவும், இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாகவும் இத்துறைமுகத்தை மாறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துறைமுகத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் 8 திட்டங்களை ரூ.1.84 கோடி செலவில் செயல்படுத்த மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், ரூ.45.46 லட்சம் செலவில் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் நீர் விளையாட்டு மையம் அமைத்தல், சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்கு பாதுகாப்புக்கு ரூ.33 லட்சம் நிதியுதவி வழங்குதல், ரூ.59 லட்சம் செலவில் வல்லநாடு வெளிமான் சரணாலயத்துக்கு அதிநவின விளக்க மையம் அமைத்தல், ரூ.10 லட்சம் செலவில் முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பித்தல், ரூ.29 லட்சம் செலவில் தமிழ்நாடு மீன்வள பல்கலைகழக மாணவர்களுக்கு சீருடை வாங்க நிதியுதவி வழங்குதல், ரூ.1.72 லட்சம் செலவில் துறைமுக மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு அவசர சிகிச்சைகாக நிதியுதவி வழங்குதல், ரூ.55 ஆயிரம் செலவில் விளையாட்டு பயிற்சி முகாம் நடத்துவதற்காக நிதியுதவி வழங்குதல், ரூ.5.42 லட்சம் செலவில் துறைமுக பகுதியில் பசுமை திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குதல் ஆகியவை அடங்கும்" என்றார்.