நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (37), விவசாயியான இவர் நேற்று முன்தினம் செங்குளம் அருகே குளக்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கும்பலை சேர்ந்தவர்கள் மாரியப்பனை சரமாரியாக வெட்டி தலை மற்றும் ஒரு காலை துண்டித்து கொலை செய்தனர். துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துச்சென்று, 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சங்கர சுப்பிரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் போட்டுவிட்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொடூர கொலையில் துப்புதுலக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி சேரன் மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.




தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலச்செவலை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவா (23), முருகன் மகன் சிவா என்ற மொட்டை சிவா (24), கீழச்செவலை சேர்ந்த சங்கர் மகன் பேச்சிமுத்து (20), பிராஞ்சேரியை சேர்ந்த பெரியதுரை மகன் வேல்முருகன் (28), கீழச்செவலை சேர்ந்த செல்லகுட்டி மகன் அய்யப்பன் (20), பிராஞ்சேரி முருகன் மகன் மாடசாமி (25), குணசேகரன் மகன் சுரேஷ் என்ற நந்தா, குணசேகரன் மகன் மகேஷ் ராஜா (24) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட மாரியப்பன் கடந்த 2014 ஆம் ஆண்டு கணேசன் என்ற கார்த்திக் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



 

 


பழிக்குப்பழியாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் முன்னீர்பள்ளம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மோதல்கள், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 8 மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், மேலச்செவல், கீழச்செவல், நயினார்குளம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சந்திப்புகள், சாலை விலக்குகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 







 

மேலும் 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கூடுதல் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் கிராமப்பகுதிகளில் வலம் வந்து பாதுகாப்பு பணியை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு நெல்லைக்கு விரைந்து வந்தார். அவர் நேற்று முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொலைக்கான காரணம், குற்றவாளிகள் விவரம், கொலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அவர் நெல்லை பகுதியில் முகாமிட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கண்காணித்து வருகிறார்.