தூத்துக்குடியில் விபத்தில் சிக்கி, கை, கால்கள் செயலிழந்த இளைஞருக்கு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன தண்டுவட அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர். 




இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சிவகுமார் கூறும்போது,  “ தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் மைதீன் (வயது 20). இவர் கடந்த 15.6.23 அன்று தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மைதீன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட போது மூச்சுத்திணறல் இருந்தது. கால்கள் முழுமையாகவும், கைகள் பகுதியாகவும் செயல் இழந்து காணப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், மைதீனின் முதுகு தண்டுவடத்தில் உள்ள சி5 என்ற எலும்பு நொறுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.




இந்த எலும்பை சரி செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாகும். இதனால் அந்த பகுதியை அகற்றிவிட்டு செயற்கையாக டைட்டானியம் கூடு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்கள் கணபதி வேல் ராமன், ராஜா விக்னேஷ், சொக்கையா ராஜா ஆகியோரும், மயக்கவியல் துறை தலைவர் மனோரமா, டாக்டர் பலராமகிருஷ்ணன், டாக்டர் சுமதி ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். பொதுவாக இது போன்ற அறுவை சிகிச்சை முன்பக்கமும், பின்பக்கமும் செய்வது வழக்கம். ஆனால் நோயாளியின் உடல் ஒத்துழைக்காத காரணத்தால் முன்பகுதியில் மட்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அதிநவீன தண்டுவட அறுவை சிகிச்சை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டு உள்ளது.




இந்த அறுவை சிகிச்சை முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.7 முதல் 10 லட்சம் வரை செலவாகும். அதே நேரத்தில் உயிர் பிழைக்கும் வாய்ப்பும் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து உள்ளோம். தற்போது மைதீன் சுயமாக நடக்கும் நிலைக்கு வந்து விட்டார். தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.




பேட்டியின் போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், நரம்பியல் நிபுணர் ராஜா விக்னேஷ், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் உடன் இருந்தனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.