நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி விசைப்படகை மீனவர்களுடன் மீட்ட இலங்கை கடற்படையினர் படகை பழுது நீக்க உதவி செய்ததோடும், படகில் இருந்த மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக ராமேஸ்வரம் திருப்பி அனுப்பி வைத்த சம்பவம் மீனவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சேகர் பாண்டியன்  என்பவருக்கு சொந்தமான விசைப்படகு  நேற்று இரவு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு எஞ்சின் கோளாறு காரணமாக பழுது அடைந்ததை அடுத்து அதிலிருந்த ஆறு மீனவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல்  திகைத்து கொண்டிருந்தனர். இதையடுத்து காற்றின் வேகத்தின் காரணமாக பழுதான விசைப்படகு இலங்கை கடல் பகுதியான மன்னார் பகுதிக்கு சென்றது.


இதையடுத்து அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை பழுதான ராமேஸ்வரம் மீனவர்களின் படகை மூன்று மெக்கானிக் மூலம் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதோடு மீனவர்கள் பசியும் பட்டினியாக இருந்து உள்ளதை கண்டு அவர்களுக்கு உணவு, பிஸ்கட், தண்ணீர் கொடுத்து இலங்கை கடற்படை உபசரித்துள்ளது.




நேற்று முன் தினம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் சரவணன், அலெக்சாண்டர், அந்தோணி, பாண்டி உள்ளிட்ட 6 பேர் மீன்பிடிக்க சென்று தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.


நள்ளிரவு சுமார் 11 மணியளவில் திடீரென படகில் உள்ள எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகில் கடல் நீர் புக ஆரம்பித்தயைடுத்து படகு மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கியது. இதனை கவனித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் உடனடியாக மீனவர்களை பத்திரமாக மீட்டு படகில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறை சரிசெய்ய முயற்சி செய்தனர்.


ஆனால், கடற்படை வீரர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் உடனடியாக மன்னார் கடற்படை முகாமில் இருந்து மெக்கானிக்கை வரவழைத்து படகை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். ஆனால் தொடர்ந்து இலங்கை கடற்படை எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. உடனடியாக இலங்கை கடற்படை வீரர் ஒருவர் ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு உரிமையாளர் செல்போன் எண்ணை வாங்கி வாட்ஸ்அப் மூலமாக 'நான் இலங்கை கடற்படை வீரர் பேசுகிறேன், உங்களுடைய படகு பழுதாகி மன்னார் கடற்படை முகாம் அருகே உள்ளது. உடனடியாக வந்து படகை மீட்டுச் செல்லுங்கள்' என வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.




உடனடியாக படகின் உரிமையாளர் ராஜா மீனவர்களையும் படகையும் பத்திரமாக மீட்டு கொண்டு வர ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகு ஒன்றை அனுப்பினார். இந்நிலையில் பழுதான படகை இலங்கை கடற்படை வீரர்கள் சர்வதேச கடல் எல்லை வரை இழுத்து வந்து படகின் உரிமையாளர் அனுப்பி வைத்த படகில் மீனவர்களையும் படகையும் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.நடுக்கடலில் பழுதாகிக் கிடந்த படகில் இருந்த மீனவர்கள் 6 பேருக்கும் இலங்கை கடற்படையினர் வாழைப் பழம், பிஸ்கட், உணவு உள்ளிட்டவைகளை அளித்து அவர்களுக்கு முழு உதவி செய்து பத்திரமாக ராமேஸ்வரம் திருப்பி அனுப்பினர். தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவின்றி தவிக்கும் சூழ்நிலையில் இலங்கை கடற்பரப்பில் படகு பழுதாகி நின்ற தமிழக மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக திருப்பி அனுப்பிய நிகழ்வு ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் சுற்றி வளைத்ததும், தங்களை படகுடன் இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து சிறையில் அடைக்க போகிறார்கள் என அச்சமடைந்திருந்த சூழலில் உணவளித்து பத்திரமாக திருப்பி அனுப்பியதற்கு இலங்கை கடற்படைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கரை திரும்பிய மீனவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.