ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே, சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆண்களும், பெண்களும் தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின்  தொகுதியில்  சாலை வசதி இல்லாமல் அல்லல்படும் கிராம மக்கள், தங்களுக்கு  சாலை வசதி அமைத்து தர கோரிக்கை வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடலாடி அருகே மேலச்செல்வனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேரங்குளம் கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அனைவரும் விவசாயம் மற்றும் கருவேல மரங்களை வெட்டி கூலித்தொழிலாளிகளாக தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.





 


இந்நிலையில், தங்களது கிராமத்திற்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், அவசர மருத்துவ சிகிச்சைக்கு அருகில் உள்ள கடலாடிக்கு செல்ல முடியவில்லை எனவும், சாலை மோசமான நிலையில் உள்ளதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட தங்களது கிராமத்திற்கு வர மறுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த கிராமத்துக்கு தார்ச்சாலை வசதியின்றி பொதுமக்கள் கடும்  அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அன்றாட தேவைகளுக்கு வெளியிடங்களுக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவியர், முதியவர்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இரண்டு சக்கரம் மற்றும் ஆட்டோக்களில் செல்லும்போது, டயர்களை ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன.


இதனால், அவசர காலங்களில் டூவீலர்களில் கூட செல்ல முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இங்கு  விளையும் வேளாண் பொருட்களையும் வாகனங்களில் சந்தைகளுக்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். இதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.





மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை அவசர காலங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஆபத்தான வளைவுகளில் கூட சாலை மோசமாக இருப்பதாக, பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே, இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சாலையை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்த நிலையில், புதிய சாலை அமைக்க வேண்டி அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சாலையின் ஓரம் முக்காடு அணிந்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூதன முறையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சாலை வசதி அமைத்து தராவிட்டால் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.


இந்த நிலையில், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தங்களது கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அக்கிராம மக்கள் கோரிக்கையாக உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண