நெல்லை மாவட்டம் மணப்படை வீடு அருகே சென்னை - கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள பொட்டல், கீழநத்தம், மணப்படை வீடு, வடக்கூர் என பல கிராமங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருவதோடு, கல்வி வேலை மற்றும் பிற தேவைகளுக்காக அன்றாடம் இந்த நான்கு வழிச் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு செல்லும் போது சாலையை கடக்க நீண்ட நேரம் காத்திருந்து கடக்கும் சூழல் இருப்பதோடு நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. அதோடு பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் துப்புரவு பணி மேற்கொண்டு வரும் ஆறுமுகம் என்பவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது நான்குவழிச்சாலையில் வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதே போல் 20க்கும் மேற்பட்டோர் இந்த சாலையால் உயிரிழந்து உள்ளதாக கூறிய மக்கள் தங்களுக்கு மாற்று பாதை அமைத்து தர வேண்டும் என்று கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வருகின்றனர், இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் சாலையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் மந்திரம் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த பத்து ஆண்டுகளாக போராடியும், செவி சாய்க்காத அரசை கண்டித்து சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் இன்று திடீரென நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட ஒட்டுமொத்தமாக திரண்டனர், தகவலறிந்து சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர், இருப்பினும் சிலர் போலீஸாரின் பேச்சுவார்த்தை ஏற்காமல் சாலையின் நடுவே நின்று கோஷம் எழுப்பவே போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர், தொடர்ந்து சாலை ஓரமாக நின்றபடி பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்,
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், பொட்டல், கீழநத்தம், மணப்படை வீடு, கீழபாட்டம், படப்பக்குறிச்சி உள்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் பாளையங்கோட்டை மார்க்கெட் செல்வதற்கு இது தான் பிரதான வழியாக உள்ளது, இதனால் இந்த நான்கு வழிச்சாலையை கடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது, இதனால் சாலையை கடக்க பாலம் அமைத்துத் தரக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம், இதுவரை 22 பேர் சாலையை கடக்கும் போது உயிரிழந்துள்ளனர், நெடுஞ்சாலைத்துறை, ஆட்சியர் அலுவலகம் என பலரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, இன்று மந்திரம் என்பவர் உயிரிழந்து உள்ளார், கடந்த 10 ஆண்டுகளாக போராடியும் எந்த நடவடிக்கையும் இல்லை, அரசு உடனடியாக எங்களுக்கு மாற்றுப் பாதை அமைத்து தர வேண்டும் இல்லையெனில் உயிரிழந்த மந்திரத்தின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் பொதுமக்களின் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் பேரில் தற்காலிகமாக பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார், மேலும் உரிய நடவடிக்கை இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்,