ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குருசடை தீவு வெளியிட ஜீவராசிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கும் தீவாகும்., இந்த தீவு தனித்தன்மையான பவளப்பாறைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும். மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் இந்த தீவு, மண்டபம் பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. மன்னார் வளைகுடாவில் வாழ்க்கையை அனுபவித்திடும் டால்பின்கள் மற்றும் கடற்பசுக்களை இந்த தீவில் காண முடியும். இந்த கடற்பகுதியின் சுற்றுப்புறங்களிலிருந்து பெரிதும் தனித்தன்மையாக மாறுபட்டுள்ள பாலனோக்லோஸ்ஸஸ் என்ற அரிய வகை வாழும் கடற்பாசிகளை இந்த தீவு பெற்றுள்ளது.




இந்த தீவின் மற்றுமொரு கடல் சூழலிற்கான சொத்து இங்கு காணப்படும் கடற்பஞ்சுகளாகும். இந்த கடற்பஞ்சு உயிரினத்திற்கு அருகில் வேறு ஏதாவது உயிரினம் வந்தாலோ அல்லது யாராவது இதற்கு ஆபத்து விளைவிக்க நினைத்தாலோ அமீபாவைப் போன்று இது உருமாறி விடும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமான இந்த தீவை சுற்றிப்பார்க்க படகு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆனால் அதற்கு கட்டணமாக  ரூபாய் 400 நிர்ணயிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது





ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் டால்பின், கடல் பசு, ஆமை, கடல் குதிரை, பவளப்பாறைகள் உள்ளிட்ட 3,600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மண்டபம் சரகத்திற்கு உட்பட்ட பாம்பன் குந்துகால் அருகே உள்ள கடல் பகுதியில் குருசடை தீவு மற்றும் சிங்கலிதீவும் உள்ளன. இதில் குருசடை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் பல வண்ணங்களில் கடலுக்குள் அதிக அளவில் பவளப்பாறைகள் உள்ளதுடன் டால்பின், ஆமை உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்களும் அதிகமாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.




சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்துறை மூலம் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடைதீவு வரையிலும் கடந்த 5  நாட்களுக்கு முன்பு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபம் கடற்கரை பகுதியில் மரத்தாலான படகு நிறுத்தும் தளம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு 12 பேர் அமர்ந்து பயணம் செய்ய பைபர் படகு ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.





படகில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.400 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு நபருக்கு அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு சவாரியில் ஆர்வம் காட்டாமல் திரும்பிச் செல்கின்றனர்.மேலும் முக்கிய இடங்களில் படகு போக்குவரத்து குறித்த தகவல் பலகை வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் குருசடை தீவு வரையிலும் தொடங்கப்பட்டுள்ள இந்த படகு போக்குவரத்தில் பயணிகளின் கட்டணத்தை குறைத்து பல்வேறு இடங்களில் இதுகுறித்த தகவல் பலகைகளை வைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் என்பது மிகவும் ஒரு அரிதான விஷயமாகவே இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள தீவுகளில் ஒன்றான குருசடை தீவை சுற்றுலா தலமாக மாற்றி உள்ளது உள்ளூர் பொதுமக்களிடமும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளிடையேயும் வரவேற்பை பெற்றிருந்தாலும் அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் என்பது அதிகமானதாகவே பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசும் வனத்துறையும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என உள்ளூர் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.