ராமர் பாலம் கட்ட பயன்படுத்திய கல் என்கிற பெயரில் பவளப்பாறைகள் ஆன்லைனில் மோசடி விற்பனை: எச்சரிக்கும் வனத்துறை.!


தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை 'ராமர் பாலம் கட்டிய கல்' என்கிற பெயரில் ஆன்லைனில் 20 கிராம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நூற்றுக்ம் மேற்பட்ட பவளப்பாறைகள் காணப்படுகினறன. இந்தப் பவளப்பாறைகளைச் சார்ந்தே கடல்பசு, டால்பின், கடல் ஆமைகள் என 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. மீன்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் விளங்கி வரும் பவளப்பாறைகளை விற்பனைக்காக வெட்டியெடுப்பது, பிளாஸ்டிக் கழிவுகள், தடை வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது போன்ற காரணங்களால் அழியத் தொடங்கியது. அழிந்து வரும் பவளப்பாறைகளை பாதுகாக்க, செயற்கை பவளப் பாறைகள் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.




 


வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆன்மீகப் பயணமாக ராமேசுவரத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்காணோர் வந்து செல்கின்றனர். இவர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி விட்டு சாமி தரிசனம் முடிந்த பின் ராமேசுவரத்தைச் சுற்றியுள்ள கோயில்கள் மற்றும் தீர்த்தங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் கோதண்டராமர் கோயில் மற்றும் ராமேசுவரம் ராமர் தீர்த்தத்திற்கு நீராட வரும் வட மாநில பக்தர்களிடம் மிதக்கும் தன்மை கொண்ட பவளப் பாறைகளை ராமர் பாலம் கட்டிய கல் என்று கூறி சிலர் விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை 'ராமர் பாலம் கட்டிய கல்' என்கிற பெயரில் ஆன்லைனில் 20 கிராம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




குறிப்பாக, வட மாநில மக்களுக்கு பவளப்பாறைகள் குறித்து தெரிய வாய்ப்பில்லை. காரணம் ஆந்திரா, லட்சத்தீவு, தமிழகம் ஆகிய கடற்கரை மாநிலங்களில் மட்டுமே பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. எனவே மக்களின் அறியாமையை பயன்படுத்தி அதில் ஆன்மீகத்தை சேர்த்து சில மாஃபியா கும்பல்கள் தடை செய்யப்பட்ட அரிய வகை பவளப்பாறைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வட மாநிலங்களில் இருந்து செயல்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு ராமேஸ்வரம் போன்ற கடற்கரை நகரங்களில் இருந்து சப்ளை செய்து வரும் உள்ளூர் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.




இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"உயர் தர ஆபரணங்கள் தயாரிப்பிற்கும், மீன் தொட்டிகளை அலங்கரிக்கவும், மீன்களை வளர்க்கவும், பவளப்பாறைகள் கடத்தி அழிக்கப்படுகின்றன. பவளப்பாறைகளை அழிப்பது எளிது. ஆனால் அதனை செயற்க்கையாக உண்டாக்குவது மிகவும் கடினம். பவளப் பாறைகளை அழிப்பதால் கடலில் வாழும் ஏராளமான உயிரினங்கள் அழிவதுடன், புவி வெப்பமயமாதலும் அதிகரிக்கும் அபாயங்களும் உள்ளன. உயிர் உள்ள பவளப்பாறைகளை கடலிலில் இருந்து எடுத்து வெயிலில் உலர்த்திய பின்னர் அது தண்ணீரில் மிதக்கும் திறனைப் பெற்று விடும். பவளப்பாறையை விற்பனை செய்தால் 3 முதல் 7 ஆண்டுகள் வரையிலும சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் முதல் அபராதமும் விதிக்கப்படும்" என்றனர்.