கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சட்டப் பேரவையில் நடந்த  கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ்குமார், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய துறையின் அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதில், முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதி படைத்த பலர் பெற்றிருப்பதும், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகள் வசதி இல்லாதோருக்கு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.




இதுபற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இந்த நிலையில்,  முதுகுளத்தூர் அருகே உள்ள கண்ணத்தான் நியாய விலை கடையில் தரமற்ற அரிசி வழங்கியதால் கடை முன்பாக அரிசியை கொட்டிய பொதுமக்கள், அங்கு போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் உணவுத்துறை அமைச்சரின் வாக்குறுதி காற்றோடு கலந்ததாக பார்க்கப்படுகிறது.




ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கண்ணத்தான் நியாய விலைக்கடையில் விளக்கனேந்தல், குடும்பன்குளம், அடிபிடிதாங்கி, வெள்ளி மரைக்கான், மூலக்கரைப்பட்டி, புல்வாய்க்கினியேந்தல், கண்ணத்தான் உள்ளிட்ட ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்காக இங்கு உள்ள ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று அங்கு வழங்கப்பட்ட அரிசி தரமற்ற முறையிலும் புழு, பூச்சி, வண்டுகள் மற்றும் கற்கள் அதிக அளவில் கிடந்ததாலும் அரிசியில் துர்நாற்றம் வந்ததாலும் பொதுமக்கள் ரேஷன் கடை முன்பாக அரிசியினை கீழே கொட்டி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு அங்கிருந்து  சென்று விட்டனர். மேலும், பொதுமக்கள் யாரும் அரிசியை வாங்காமல் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.




மக்கள் ரேஷன் கடை முன்பாக அரிசி கொட்டிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசி சமைத்து உண்ண முடியாதவாறு அளவில் பெரியதாக உள்ளது. மேலும் அரிசியில் தூசி, சிறு கற்கள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. இதுதவிர இந்த அரிசியை பலமுறை நீரில் சுத்தம் செய்து சமைத்தாலும் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தரமற்ற முறையில் வழங்கப்பட்ட அரிசியை திரும்பப் பெற்று முறையான நல்ல அரிசி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.