காருகுடியில் துவங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம், 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது ராமநாதபுரம் பெரிய கண்மாய். 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க முடியும்.ஆனால், இன்று கண்மாயில் 20 அடி துார்ந்து போய் மண் மேடாகிவிட்டது. இதனால் நீர்ப்பிடிப்பு நான்கில் ஒரு பங்காக குறைந்து விட்டது. கண்மாய் துார்வாரப்படாமலும், வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் மழை நீர் வீணாகி கடலில் கலக்கிறது. கண்மாய் மதகுகள் பழுதடைந்துள்ளதை கூட பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைப்பதில்லை. இதனால் ஓட்டை மடைகள் வழியாக தண்ணீர் வீணாகிறது. இந்த கண்மாயை நம்பி 3,968.65 ஏக்கரில் புன்செய் சாகுபடி நடந்து வந்தது. தற்போது இது நான்கில் ஒரு பங்காக குறைந்து விட்டது. தொருவளூர், பாப்பாகுடி, குமரியேந்தல், கவரங்குளம், களத்தாவூர், சூரங்கோட்டை, இடையர்வலசை, கே.கே.நகர், முதுநாள், நொச்சிவயல், சூரியூர், அச்சுந்தன்வயல், புத்தேந்தல், சாக்காங்குடி, வன்னி வயல், சித்துார், லாந்தை, ராமநாதபுரம் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர்.மேலும், இந்த கண்மாய் நீர் ராமநாதபுரம் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகும்.





களத்தாவூர், நொச்சிவயல், கூரியூர், புத்தேந்தல் செக்டேம்களில் இந்த கண்மாய் நீர் தேக்கப்படும்.ராமநாதபுரம் நகரில் உள்ள முகவை ஊரணி, லெட்சுமிபுரம் ஊரணி, நீலகண்டி ஊரணி, பேராகண்மாய் ஊரணி, நொச்சியூரணி, கிடாவெட்டி ஊரணி, குண்டூரணி, செட்டியூரணி, அல்லிக்கண்மாய் ஊரணி உள்ளிட்ட ஊரணிகளுக்கும் பெரிய கண்மாய் நீர்தான் ஆதாரம். தற்போது இந்த கண்மாயை சீரமைக்கும் பணி ரூ.10 கோடியில்  நடைபெற்று வருகிறது.





ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீரை வீணாகாமல் விரைவாக கொண்டு செல்ல ரூ.9 கோடியே 93 லட்சம் மதிப்பில் மதகு, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.ராமநாதபுரம் நகரை சுற்றிய பகுதிகளின் விவசாய தேவையையும், தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்யும் ஒரே நீர் ஆதாரம் பெரிய கண்மாய் ஆகும். பருவமழை நன்றாக பெய்யும் சமயங்களிலும், வைகை தண்ணீர் கடைசிவரை வந்து சேரும் தருணங்களிலும்தான் இந்த பெரிய கண்மாய் நிறைந்து விவசாயம் செழித்து வருகிறது. பெரும்பாலான காலங்களில் இந்த கண்மாயில் தண்ணீர் தேக்க வழியில்லை, பாதுகாப்பில்லை என்ற காரணங்களை கூறி தண்ணீர் அனைத்தையும் கடலில் கலந்துவிட செய்வதுதான் இதுநாள் வரை நிலவி வருகிறது. இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்த நிலையில் பெரிய கண்மாய் வேகமாக நிரம்பியது. அந்த சமயத்தில் வைகை அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டு கொஞ்சம்கூட சேமிக்க முடியாமல் தண்ணீர் கடலில் கலந்து வீணாகியது. 




இதன் காரணமாக பெரிய கண்மாயில் தண்ணீர் தேக்கி வைப்பது, கரையை பலப்படுத்துவது, வரத்து கால்வாய்களை சீரமைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் எழுந்தது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பயனாக தற்போது பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரும் பகுதியை சீரமைத்து சரிசெய்ய ரூ.9 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிதியின் மூலம் பொதுப்பணித் துறையின் சார்பில் பெரிய கண்மாய் தலைமதகு பகுதியில் பெரியகண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும் 7 மதகு கதவுகளை விட தற்போது கூடுதலாக 2 கதவுகள் மதகுகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுநாள் வரை பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் 1, 850 கனஅடி கொண்டு சென்ற நிலையில் இனிவரும் காலங்களில் கூடுதலா 550 கனஅடி தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதன்படி பார்த்தால் வைகை தண்ணீரால் 7 நாட்களில் பெரிய கண்மாய் நிரம்பி வந்த நிலையில் இனி 4 முதல் 5 நாட்களில் கொள்ளளவை எட்டிவிடும். 





இதுதவிர, காருகுடி ரோடு பாலம் முதல் தலைமதகு வரை வைகை ஆற்று கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் கரைகளை பலப்படுத்தும் பணியுடன் ஆற்றுப்பகுதி மேடு, பள்ளங்களை சரிசெய்யும் வகையில் தரை சமப்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் 2 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு கட்ட பணிகளினால் தண்ணீர் தங்கு தடையின்றி சீராக பெரியகண்மாயை சென்றடையும். இந்த பணிகள் அனைத்தையும் வரும் பருவமழை காலத்திற்கு முன்பாக முடிக்க பொதுப்பணித்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.