ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலும் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 21 தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுகளைச் சுற்றிலும் பவளப்பாறைகள் , கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களான கடல் பசு, டால்பின்கள் அதிகமாகக் காணப் படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே அதிகளவில் 4,223 கடல்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இங்குதான் உள்ளன. கடற்பாசி வளர்ப்பிற்கு இந்த பகுதி ஏதுவானதாக அறியப்படுகிறது. இதனால்,  மகளிருக்கான கடற்பாசி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற மீனவ பெண்கள் கடற்பாசிகளை  ஆர்வமாக வளர்க்கின்றனர். அது மீன் பிடி இல்லாத நாட்களில் மீனவர்களுக்கு கை கொடுக்கிறது.



தற்போது, மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மாற்றுத் தொழில்களை நோக்கி பயணித்து வரும் சூழலில் உள்ளனர். அவ்வாறு மீனவர்களுக்கான சிறந்த கடல்சார் மாற்று தொழிலாக கடல்பாசி வளர்ப்பு கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. தமிழக அரசும் கடற்பாசி வளர்ப்பினை ஊக்கப்படுத்தி வருகிறது. கடற்பாசி என்னும் கப்பாகைகஸ் ஆல்வரேசி என்ற பாசி சாக்லேட், ஐஸ்க்ரீம், ஜிகர்தண்டா மற்றும் மருத்து பொருட்களுக்கு பயன்பட்டு வருவதால் உலகளவில் இதற்கு தேவை அதிகமாகி உள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கடற்பாசி மீனவர்களால் வளர்க்கப்பட்டு வருகிறது.



குறிப்பாக சம்பை, சங்குமால், ஓலைகுடா, மாங்காடு, வடகாடு, அரியாங்குண்டு, தண்ணீரூற்று உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் பெண்கள் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.இதுதவிர, மண்டபம் வடக்குகடல் பகுதியிலும் அதிகஅளவில் பாசி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். நிலத்தில் விவசாயம் போன்று பாசி வளர்ப்பும் கடலில் செய்யும் விவசாயம். கப்பா பைகஸ் என்ற வகை பாசிக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளது. மூங்கில்களை சதுரமாக கட்டி அதில் கடல்  பாசி வளர்த்து சேகரிக்கின்றனர். அவ்வாறு அறுவடை செய்த கடல்பாசியை கடற்பகுதியில் உலரவைத்து அதிலுள்ள மண்ணை அகற்றி விற்பனை செய்கின்றனர். இதனை பல்வேறு மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் கடற்கரைக்கே வந்து வாங்கி செல்கின்றனர். சில நிறுவனங்கள் கடற்பாசியை மீனவர்களுக்கு வழங்கி அறுவடைக்குப் பின்னர்  அதனை வாங்கி செல்கின்றனர். கடல்பாசி கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பதாக கூறும் மீனவர்கள் ஒருகிலோ பாசியை வளர்த்தால் 10 கிலோ முதல் அறுவடை கிடைக்கும் என கூறப்படுகிறது.



இந்த நிலையில், மீன்பிடித்தடைக்காலத்தின்போது வருவாய் ஈட்ட ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பி.வி.பட்டினம் கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் மற்றும் மகளிர்குழுவினர் கடலில் கடற்பாசி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மீன்வளத்துறை, கால் நடைத்துறை, பால்வளத்துறை சார்பில் கடல்பாசி விதைகள் வழங்கும் நிகழ்வு பி.வி.பட்டினத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர்  சங்கர்லால் குமாவத் கலந்துகொண்டு ஏராளமான மீனவர்களுக்கு கடற்பாசி விதைகளை வழங்கி கடற்பாசி வளர்ப்பை ஊக்கப்படுத்தினார். மேலும் கடற்பாசி சரியாக வளர்க்கப்படுகிறதா  என்பதை  கடற்கரைக்கு சென்று நேரில் பார்வையிட்டு பயனாளிகளிடம் கேட்டறிந்தார். இதில் திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.