பரிகாரம் செய்வதாக கூறி பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அவரது தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.



ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி, அவர் அங்குள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இவரது தந்தையும், தாயும் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தீடீரென மாணவியின் மனநலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிந்துகொண்ட அவரின் தாயார், அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கியுள்ளார். அப்போதுதான் மாணவி சொந்த தந்தையால் நீண்ட நாட்களாக பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரது தந்தை மற்றும் தாயாருக்கு இடையே கடும் வாக்குவாதமும், பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மகளின் மனநிலையை சரி செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்திய தாயிடம் அக்கம் பக்கம் உள்ளவர்கள், உறவினர்கள் என பலரும் அவருக்கு பேய் பிடித்திருக்க வாய்பிருப்பதாகவும் பூசாரியிடம் அழைத்துச சென்று விபூதி அடித்தால் சரியாகி விடும் என்றும் கூறியுள்ளனர்.



'பரிகார பூஜை'


இதை நம்பிய மாணவியின் தாயார், ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை கொட்டகை பகுதியை சேர்ந்த 48 வயதான சிவக்குமார் என்ற பூசாரியிடம் கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பார்த்த பூசாரி சிவக்குமார், "நோய் முற்றிய நிலையில் அழைத்து வந்துள்ளீர்கள். இதற்கு பரிகாரம் செய்து சரிசெய்ய 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்" என்று கூறியுள்ளார். மேலும், பரிகார பூஜை செய்ய சுடுகாட்டின் அருகில் உள்ள கூரை கொட்டகைக்கு இரவு நேரத்தில் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு குடிக்க பால் கொடுத்துள்ளார். அதனை குடித்ததும் சில நிமிடங்களில் மயங்கிய சிறுமியை பூசாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் சிறுமி முன்பைவிட மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்.



தந்தை-பூசாரி கைது


பாலியல் ரீதியாக தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயாரிடம் கூறி மாணவி அழுத நிலையில், சம்பவம் குறித்து சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணையை தொடர்ந்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் பூசாரி சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.சுபத்ரா, சிறுமியின் தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


 




சாகும் வரை சிறை


மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பூசாரி சிவக்குமாருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கிய நீதிபதி, 5 லட்சம் ரூபாய் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைதண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு நிவாரணமாக 7 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி சுபத்ரா விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.