நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தை சந்தித்த ராகுல் காந்தி 


 





குமரியில் இருந்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி துவங்கிய இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் போது இரண்டாவது நாளான இன்று நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருடன் ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.

 

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது நாளாக இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து தனது இந்திய ஒத்துமை நடை பயணத்தை துவங்கினார். இந்த பயணம் சுசீந்திரம் பகுதியை நோக்கி வந்துகொண்டு இருந்தபோது சுசிந்திரம் பகுதியில் வைத்து நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் அனிதாவின் அண்ணன் அருண்குமார் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியுடன் சென்று ராகுல் காந்தியிடம் நடைபயணத்தின் போதே சந்தித்து பேசினர்.

 



 

இதுகுறித்து அனிதாவின் அண்ணன் கூறியதாவது, தமிழக மக்களின் கோரிக்கை நீட் தேர்வு விலக்கு தான். ஆனால் தற்போதைய மத்திய அரசு இந்த மக்களின் கோரிக்கையை காதுகொடுத்து கேட்கவில்லை. மத்தியில் நமக்கான ஒரு அரசு அமையவேண்டும் அந்த அரசு நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இன்று இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தும் ராகுல் காந்தியை அவரது பயணத்தில் நாங்களும் பங்கேற்று மூன்று கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்து அவரை சந்தித்து பேசினோம். அவர் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையான இந்த பிரச்சனையை கேட்டு அறிந்தார். கண்டிப்பாக மத்தியில் அவர் ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர் இந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்குபெற வேண்டும் என்றும் கூறினார்.