வைரஸ் காய்ச்சல்:


தூத்துக்குடி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற கூட்டம் அதிகம் காணப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய்களும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனனையில் உள் நோயாளிகள், மகப்பேறு, அறுவை சிகிச்சை பெற்றோர் என நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 200 பேர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் 50 பேர் வரை வந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.


இது ஒருபுறம் இருக்க தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரம் என்றால் என்ன எனக்கேட்கும் நிலை உள்ளதாக குறிப்பிடும் உள் நோயாளிகள், கழிப்பறையில் தண்ணீர் கிடையாது, தண்ணீர் குழாய்களில் இருந்து கசியும் நீரால் மருத்துவமனை வளாகத்தில் கொசு உற்பத்தி மையமாக உள்ளது. மேலும் கழிவுகள் கொண்டு செல்லப்படும் கழிவு நீரோடையில் மூடிகள் இல்லாததால் துர்நாற்றமும் வீசுவதாக கூறும் நோயாளிகள், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற இங்கு வந்தால் கூடுதலா காய்ச்சல் வரும் நிலை உள்ளதாக கூறுகின்றனர்.


கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கும் நிலை


மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் மற்றும் மழை நீர்  செல்லும் பாதைகள் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளதாக கூறும் தூய்மை பணியாளர்கள், அடைப்பை சரி செய்ய போராட வேண்டியது இருக்கு என கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது. மருத்துவமனை கட்டிடங்களில் நீக்கமற வளர்ந்து உள்ள மரங்களால் கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கும் நிலை உள்ளதாக கூறும் மருத்துவமனை அலுவலர்கள், இதன் காரணமாக ஆங்காங்கே விரிசல் ஏற்படும் நிலை உள்ளதாக கூறுகின்றனர்.




இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, மருத்துவமனையில் உள்ள கழிவு நீரோடைகளின் மூடிகளை சரி செய்ய சொல்லியும், கசிவு வீணாகும் தண்ணீர் குழாய்களை சீரமைக்கவும், கட்டிடங்களில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றி பராமரிக்க பலமுறை பொதுப்பணித்துறைக்கு தெரிவித்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்கின்றனர்.‘ தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள், கனிமொழி எம்.பி என இருந்தும் அரசு மருத்துவமனை பாராமுகமாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.