நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், மேல்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கனகராஜ் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்திரலேகா. கனகராஜின் தம்பி முத்துக்குமார். இவர் கோவையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனகராஜின் சகோதரர் முத்துக்குமார் அதே பகுதியை சேர்ந்த நாராயணபெருமாள் (53) என்பவரது மகள் அனிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் திருமணம் என்பதால் நாராயணபெருமாள் திருமணத்தின் போது, தனது மகளுக்கு நகைகள் அணிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கனகராஜ், நாராயணபெருமாளிடம் உனது மகளுக்கு நகைகள் போட வேண்டும் என்று கூறி வந்துள்ளார். மேலும் அடிக்கடி கனகராஜ், நாரயணபெருமாளிடம் உனது மகளுக்கு எப்போது நகை போடுவாய்? என்றும் கேட்டு வந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணபெருமாள், கனகராஜை கம்பால் தாக்கினார். இதுபோல கனகராஜ், நாராயணபெருமாள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளார். இதுகுறித்து இருவரும் களக்காடு போலீசில் தனித்தனியாக புகார் செய்துள்ளனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி இருவரையும் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கனகராஜ்க்கும், நாராயணபெருமாளுக்கும் இரவில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது கனகராஜ்  மீண்டும் மகளுக்கு இன்னும் நகை போடவில்லை என்பதை கூறியுள்ளார். இதையடுத்து கடும் ஆத்திரம் அடைந்த நாராயணபெருமாள், கனகராஜை மண்வெட்டியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


 




இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கனகராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் ஏற்கனவே இருவர் புகாருக்கும் வழக்கு பதிவு செய்த நிலையில் நாராயண பெருமாள் மீது கொலை வழக்கும் பதிவு செய்தனர். அதோடு நாராயணபெருமாள் தப்பியோடிய நிலையில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தம்பி காதல் திருமணம் செய்த நிலையில் அண்ணன் அப்பெண்ணின் தந்தையிடம் மகளுக்கு நகைகள் போட சொல்லி பிரச்சினை செய்து தற்போது அது கொலையில் முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.