இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும், டிரேடிங் ஆப் பரிசு விழுந்திருப்பதாகவும் மற்றும் கேஒய்சி அப்டேட் செய்வதற்கு என்றும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக குறுஞ்செய்தி அனுப்பி பண பரிவர்த்தனை செய்வதற்கான otp யை பெற்றுக் கொண்டு வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டதாக நெல்லை மாநகர காவல் துறைக்கு பல்வேறு தகவல்கள் வரப்பெற்று உள்ளது. அதனடிப்படையில் காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் தீவிர விசாரணையானது நடைபெற்று வந்தது.
பெறப்பட்ட புகார் தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் துரிதமாக விசாரணை நடத்தி ஏமாற்றியவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி வைத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பாக பணத்தை இழந்த நபர்களுக்கு பணத்தை திரும்பி வழங்கும் நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 25 லட்சத்து 2500 ரூபாய் மற்றும் 100 கைப்பேசிகள் ஆகியவைகளை கைப்பற்றினர்.
இதனை உரியவர்களிடம் மாநகர காவல் ஆணையாளர் ஒப்படைத்தார். மேலும் ஆன்லைன் மூலம் நடைபெற்ற மோசடியில் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 34 லட்சத்து 92 ஆயிரத்து 133 ரூபாய் வங்கிகள் மூலம் திரும்பி பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் பண மோசடி செய்த நபர்களின் வங்கிக் கணக்கில் சுமார் ஒரு கோடி 34 லட்சத்து 45,83 ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய தொகையினை மோசடிக்குள்ளான 23 நபர்களுக்கு திரும்ப அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் போதை தடுப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்