நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட  பகுதிகளை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டு மக்களின் பாதிப்புகளை கேட்டறிந்து நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் பொழுது, "பெரியார் பேருந்து நிலையம் முக்கியமான பகுதி. இங்கு கடந்த 5 வருடமாக பணி நடந்து வருகிறது. ஆனால் இதுவரை பணி முடியவில்லை. இங்குள்ள வியாபாரிகள் அத்தனை பேரும் கோடிக்கணக்கான ரூபாயை இழந்து உள்ளனர். எல்லா பகுதியையும் பார்த்துக்கொண்டு தான் வருகிறேன். 180 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சுலோச்சன முதலியார் பாலம் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. ஆனால் 25 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட பாலம் முற்றிலுமாக சிதலமைடைந்து முழுவதும் சேதமடைந்து உள்ளது. மக்களிடம் கேட்டால் தாமிரபரணி ஆறு நிரம்பி ஊருக்குள் வந்ததாக சொல்கின்றனர். இதை யாரு முன்னெச்சரிக்கையாக அறிவிக்க வேண்டும். முன்னதாக  அறிவித்து எல்லோரையும்  இடமாற்றம் செய்திருக்க வேண்டும், ஆனால் மக்கள் கூறும் பொழுது, எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை, நள்ளிரவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர், அதனால் எங்களால் எதையும் எடுக்கமுடியவில்லை என்று கூறுகின்றனர்,இன்று அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கின்றனர். 


எங்களால் முடிந்த நிவாரணப்பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். ஒட்டுமொத்த நிர்வாகிகளும் உதவி செய்ய வந்துள்ளோம், ஆனால் ஆட்சியில் இருக்கும் திமுகவினர் என்ன செய்கின்றனர் என ஒட்டு மொத்த மக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.  ஆட்சியில் இருப்பவர்கள் வேலை என்ன? மின்சாரம், குடிநீர், சுகாதாரம் என அனைத்தையும் சீரமைக்க வேண்டும். இதையெல்லாம் கேட்க வேண்டிய முதல்வர் கூட்டணி தான் முக்கியம் என நேற்று டெல்லி சென்று அங்கிருந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒட்டு மொத்த வாக்களித்த மக்களுக்கு தான் முதல் வேலைக்காரன் என டயலாக் மட்டும் பேசுகிறார். மக்கள் பாதித்திருக்கும் போது அவர் தான் முன்னாள் வந்து நிற்க வேண்டும்,  ஆட்சியில் இருப்பவர்கள் தான் வர வேண்டும், நானே ஆட்சியில் இருந்தால் ஒரு தெரு விடாமல் இறங்குவேன். ஆனால் திமுகவினர் ஆட்சியில் இருந்தும் மக்களை வந்து ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்,  அடுத்த தேர்தலுக்கான வியூகத்தை தான் திமுக செய்கிறதே தவிர வாக்களித்த மக்களுக்கு இந்த ஆட்சி நல்லது செய்யவில்லை என தெளிவாக புரிகிறது. 


நெல்லை மேயர் வந்தாரா? அவர்களுக்குள்ளே சண்டை. இது தான் ஓடுது. ஓட்டுக்காகவும், லஞ்ச ஊழல் செய்வதற்கும் தான் ஆட்சியாளர்களே தவிர மக்களுக்கு நல்லது செய்ய யாரும் இல்லை என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  கஷ்டம் வரும் போது மட்டும் முறையிடுகிறீர்களே தவிர பின்  இதை மறந்துவிட்டு ஓட்டுக்கு காசு கொடுத்தால் அவர்கள் பின்னால் ஓடுகிறீர்கள். நீங்கள் ஒரு மாற்றத்தை கொடுத்தால் ஒரு புரட்சியையே ஏற்படுத்த முடியும். உடனடியாக அரசு இந்த பணிகளில் இரும்பு கரம் கொண்டு போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.  சென்னையில் 6 ஆயிரம் கொடுத்தது போல இங்கு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு 5 லட்சம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இன்று ஆளுநர் ஒரு கருத்து சொல்கிறார், முதலமைச்சர் ஒரு கருத்து சொல்கிறார். முப்படைகளையும் அனுப்ப  தயாராக இருக்கிறோம் என ஆ ளுநர் சொல்கிறார், ஆனால் அவர் உதவி செய்யவில்லை என இவர்கள் முறையிடுகின்றனர். காலையிலிருந்து இங்கு ஒரு திமுக காரர்கள் கூட இல்லை. இதே தேர்தல் நேரம் என்றால் ஒரு தெருவிற்கு 50 பேர் வந்து நிற்பார்கள்" என விமர்சித்தார்.