திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல தூத்துக்குடியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்தது.


தமிழ்நாடு முழுமைக்கும் ஒரு ஆண்டுக்குப் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் காயல்பட்டினத்தில் 94 செ.மீ. அளவுக்குக் கொட்டித் தீர்த்தது.


வரலாறு காணாத மழை


டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 2  மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.


இதற்கிடையே பாதிப்பு காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 2 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. 


படிப்படியாக பள்ளிகள் திறக்க ஆய்வு


இந்த நிலையில்,  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (டிச.20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும். வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் கூறும்போது, நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


63 நியாய விலைக் கடைகளுக்கு பாதிப்பு


கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


அதேபோல தூத்துக்குடியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.