தூத்துக்குடியில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள்டிவி, இன்டர்நெட் வயர்களை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அண்ணா நகரில் 2019ம் ஆண்டு மின்கம்பத்தில் கேபிள் டிவி வயரைக் கட்டிக் கொண்டிருந்தபோது, கேபிள்டிவி ஆப்ரேட்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி, இன்டெர்நெட் வயர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள், இன்டர்நெட் நிறுவன பிரதிநிதிகளுடன் மின்வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும், மின்வாரியத்திற்குச் சொந்தமான மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளுக்கு அடியில் எவ்வித அனுமதியும் பெறாமல் பொருத்தப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி வயா்கள், பதாதைகளையும் அகற்றிட பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவை அகற்றப்படவில்லை. இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூா் சாலை, தாமஸ் நகா் மற்றும் பனிமய மாதா நகா் ஆகிய பகுதிகளில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் டிவி வயா்கள், பதாகைகள் அனைத்தையும் அகற்றும் பணி நடைபெற்றது.
இப்பணிகளில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் உமையொருபாகம் (தெற்கு), பிரேம், (வடக்கு), உதவி பொறியாளர்கள் பெருமாள் ராபர்ட், மற்றும் மின்வாரிய ஊழியர்கள் 60பேர் ஈடுபட்டனர். மின்கம்பங்களில் கேபிள்டிவி, இண்டர்நெட் வயர்களை இணைப்பதால் மின்வாரிய ஊழியர்கள், கேபிள் டிவி ஊழியர்களுக்கு ஆபத்தான நிலை நிலவுகிறது. மேலும் இதனால் மின் சாதன பொருட்களும் சேதமடைய வாய்ப்புள்ளது எனவே மின்கம்ங்களில் இதுபோன்ற வயர்களை கட்டக்கூடாது எனவும், இதுபோல் தூத்துக்குடி நகரின் பிற பகுதிகளிலும் பொங்கலுக்குப் பின் இப்பணி மேற்கொள்ளப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மின்வாரியத்தினர் மின்கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கேபிள் டிவி இணைப்புகள் மற்றும் தனியார் இணையதள சேவைகள் பெயர்களை துண்டித்தனர். இதனால் அப்பகுதியில் இணையதள சேவை மற்றும் கேபிள் டிவி இணைப்புகள் பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தனியார் இணைய தள சேவை நிறுவனத்தினர் மின்கம்பங்களில் இருந்து அகற்றப்பட்ட கேபிள்களை தூத்துக்குடி மாநகராட்சி தெரு விளக்கு கம்பங்களில் வயர்களை இழுத்து சென்று இணையதள சேவைகளை தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்தனர்.