தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிதாக திருமணம் ஆன பெண் பிள்ளைகளுக்கு சிலர் காலம், காலமாக பொங்கல் சீர்வரிசை பொருட்களை வழங்குவார்கள். அந்த வகையில் அவர்கள் கொடுக்கும் சீர்வரிசை பொருட்களில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் பித்தளையால் ஆன குத்து விளக்குகள், பித்தளை பாத்திரங்கள் ஆகியவை இடம் பெறும். இந்த நிலையில் தான் அதன் உற்பத்தியும், விற்பனையும் களை கட்டும். குறிப்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பித்தளை குத்து விளக்குகள் தயாரிக்கும் பணியானது தீவிரமடைந்துள்ளது.


குத்துவிளக்கின் தத்துவம்:


குத்து விளக்கு தெய்வீகமானது. இந்துக்களும் தமிழர்களும் மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக இதனைக் கொள்வர். இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம் என்றும், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம் திரி – பிந்து சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ -மலை மகள். இப்படி அனைத்தும்சேர்ந்ததே குத்து விளக்கு என்பர். இந்த விளக்கை சந்தனம் வைத்து குங்கும் இட்டு பூச்சுற்றி அலங்காரம் செய்வது என்பது தமிழர்களின் வழக்கமாகும். பித்தளை குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் பொருள் மரபு வழியான உலோகமாகும். இவ்வுலோகம் வேண்டிய வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அச்சுக்களில் உருக்கி வார்க்கப்பட்டுப் பின்னர் அதனை வெளியில் எடுத்துக் கண்ணுக்குத் தெரியக் கூடிய பகுதிகள் மினுக்கம் செய்யப்படுகின்றன. சுலபமாக உருக்கி வார்க்கக் கூடிய தன்மையும், தங்கத்தை ஒத்த அதன் நிறமும் இவ்வுலோகம் விரும்பப்படுவதற்கான காரணங்களாகும். இக்காலத்தில் துருவேறா உருக்கையும் குத்து விளக்குகள் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலும் சிறிய விளக்குகளே இவ்வாறு செய்யப்படுகின்றன. இவ்வுலோகத்தைப் பயன்படுத்தும் போது உருக்குத் தகடுகளையே பயன்படுத்துவது வழக்கம். இத்தகைய விளக்குகள் விலை குறைவானவையாக இருந்தாலும் தோற்றத்தில் பித்தளை விளக்குகளுக்கு இணையாகாது. வீட்டுகளுக்கு தேவையான குத்துவிளக்கு அரை அடி முதல் 5 அடி உயரம் வரை வடிவமைக்கப்படுகிறது. அலங்கார குத்துவிளக்குகள் 30 அடி வரை வடிவமைக்கப்படுகிறது.




அச்சு வார்த்தல்:


குத்து விளக்கு செய்யும் போது மிகவும் முக்கியம் என்பது அதன் டிசைன். அது முடிவு ஆனவுடன் அச்சு செய்கிறார்கள். அடி பாகம், நடு பாகம், மேல் பாகம் மற்றும் அன்ன பட்சி டிசைன் என்று நான்கு அச்சு செய்து கொள்கின்றனர். முதலில் மண்ணை (ஸ்பெஷல் மண்) ஒரு சமதளமாக ஆக்கி அதில் இந்த அச்சை வைத்து எடுக்கின்றனர். அச்சு நன்கு பதிந்தவுடன் வெளியே எடுத்து அதை போலவே அடுத்தபாகம் செய்கின்றனர். பின்னர் இரண்டு பாகங்களையும் சேர்த்து விடுகின்றனர். இப்போது பித்தளையை உருக்க வேண்டும். பித்தளை என்பது இவர்களுக்கு பல வழிகளில் கிடைக்கிறது. இதைதான் உருக்கி அந்த அச்சின் உள்ளே ஊற்றுகின்றனர். இப்படி அச்சின் உள்ளே ஊற்றிய அந்த பித்தளையை சிறிது நேரத்திலே வெளியே கவிழ்த்து எடுத்து விடுகின்றனர். இதன் மூலம் உள்ளே பித்தளை கோட்டிங் மட்டுமே இருந்து வெற்றிடம் இருக்கும். இப்படி எடுக்கப்படும் பித்தளை பார்ப்பதற்கு பழையது போன்று இருக்கும்.  இதன் பின்பு அதனை மெருகேற்றி, இயந்திரம் மூலம் மேலே இருக்கும் அழுக்கு போன்றதை எடுக்க எடுக்க அதன் பளபளப்பு நன்கு தெரிய ஆரம்பிக்கும். இப்படி ஒவ்வொரு பாகத்தையும் மெருகெற்றுகின்றனர். பின்பு மிஷின் மூலம் பாலீஷ் செய்வதால் பளபளப்பாக காட்சியளிக்கிறது. இறுதியாகவே கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.




இதுகுறித்து வள்ளியூர் வியாபாரிகள் சங்க செயலாளரும், குத்துவிளக்கு உற்பத்தியாளருமான ராஜ்குமார் கூறுகையில்:  பொங்கல் பண்டிகை தமிழர்களின் சிறப்பான பண்டிகையாகும். குறிப்பாக இந்துக்கள் திருமணம் முடிந்தது முதல் பொங்கலை ( தலைபொங்கல் ) கொண்டாடும் தம்பதியினருக்கு தலைபொங்கலுக்கு சீர்வரிசை சீதனமாக குத்துவிளக்கு பாத்திரங்கள் கொடுப்பார்கள். மேலும் விவசாய நிலங்களில் உற்பத்தியாகும் பொருட்களையும் சீர்வரிசையாக கொடுப்பார்கள். இங்கு தயாரிக்கப்படும் குத்து விளக்கானது ஒரு அடி முதல் 5 அடி உயரம் வரை தயாரிக்கபடுகிறது. இங்கிருந்து கோயமுத்தூர், மதுரை மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட பல பகுதிக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது. கடந்த ஆண்டு  மழை குறைவு என்பதால் வியாபாரம் குறைந்து இருந்தது. இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்ததால் விற்பனையானது அதிக அளவில் இருக்கிறது  என தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பித்தளை பாத்திரங்கள் விற்பனையானது களைக்கட்ட துவங்கியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.