பண்டையகாலமும், இளவட்டக்கல்லும்:
முந்தைய காலங்களில் தமிழ் ஆண் மக்களின் வீரத்தை பறைசாற்றும் பல்வேறு வீர விளையாட்டுகள் நடப்பதுண்டு. வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக பெண்ணை திருமணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் இருந்ததும் உண்டு. புராண இதிகாச, இலக்கியங்களிலும் கூட ஒரு விளையாட்டு அல்லது போட்டியில் வெற்றி பெற்ற வீர ஆண்மகனுக்கு அந்த விளையாட்டை அல்லது போட்டியை நடத்தியவர்கள் சார்பில் வெற்றி பெற்ற வீர ஆண்மகனுக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை காண முடிகிறது. தமிழர் பண்பாடுகளில் தலைசிறந்ததாக சங்க இலக்கியம் தொட்டே காதலும், வீரமும் பேசப்பட்டு வருகிறது.. அந்த வகையில் வீரம் நிறைந்த ஆண்மகனை ஒரு பெண்ணுக்காக தேர்ந்தெடுக்கும் முயற்சிக்காக காளையை அடக்குதல், இளவட்டக் கல் தூக்குதல், என ஒரு ஆணின் வீரத்தை பரிசோதிக்கும் விளையாட்டுகளும், போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன.
இன்றைய கால இளவட்டக்கல்:
இன்றைய காலகட்டத்தில் இத்தகைய வழக்கம் மறைந்து போய்விட்டாலும் தமிழர்கள் வாழும் பல மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்ட கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றுதான் வருகிறது. ஆனால் அவற்றிற்கும் பரிசாக வெற்றி பெற்ற ஆண் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்து வைக்கும் வழக்கம் இல்லாமல் மாறாக பரிசு தொகையும், பொருட்களும் வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் குறிப்பாக பாண்டிய நாட்டில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு. அதுவும் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி இன்றளவும் தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகைக்கு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதனை செய்து வருவது வியப்பை அளித்து வருகிறது.
இளவட்டக்கல் தூக்கும் படிநிலைகள்:
இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 45, 60, 80 மற்றும் 129 கிலோ எடை கொண்டதாகவும், முழு உருண்டையாக வழுக்கும் தன்மை கொண்டதாக எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. முதலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் பின்பக்கமாக தரையில் விழுமாறு செய்யவேண்டும். தமிழரின் உடல் பலத்திற்கும், வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை காணமுடிகிறது. இருந்தபோதிலும் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி வழக்கம்போல் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
பயிற்சியும், கோரிக்கையும்:
இளவட்டக்கல் விளையாட்டு போட்டியில் பங்குபெற ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று நடைபெற இருக்கும் உரல் தூக்கும் போட்டியிலும் பங்குபெற இளைஞர்களுக்கு இணையாக இளம் பெண்களும் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இப்போட்டியில் உரலை ஒருகையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற இருக்கிறது. இரண்டு வார கால இடைவெளியில் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் பயிற்சிகள் வேகம் எடுத்துள்ளன. அதே போல இந்த இளவட்ட கல் விளையாட்டை மேலும் ஊக்கப்படுத்த அரசு இளவட்ட கல் தூக்க பயிற்சி கொடுக்க இடம் ஒதுக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் இளவட்ட கல் போட்டிகள் நடத்த அரசு முயற்சிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த விளையாட்டை கொண்டு வர வேண்டும் எனவும் தொடர்ச்சியாக அரசுக்கு கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.