பொங்கலுக்கான பொருள்கள் வாங்கும் போதும் மங்களகரமாக முதலில் வாங்குவது மஞ்சள்குலை தான். பொங்கலன்று வீட்டின் முன் பொங்கல் பொங்கி முடிந்ததும் அடுப்பிலிருந்து பானையை இறக்குவதற்கு முன்பு மஞ்சள் குலையை சுற்றி வைத்து சூரிய பகவானை வணங்குவது வழக்கம். பொதுவாக மஞ்சள் என்பது கிருமிநாசினி பொருள், பொங்கல் முடிந்த பின்னும் மஞ்சள் குலைகளை வீட்டின் ஒரு பகுதியில் கட்டித் தொங்கவிடுவது வழக்கம். இதனால், வீட்டில் ரம்மியமாக மஞ்சள் மணப்பதுடன் பூச்சிகளோ, விஷ ஜந்துக்களோ வீட்டுக்குள் வராது என்பது முன்னோர்களின் நம்பிக்கை, அத்தகைய நம்பிக்கை இன்றளவும் மக்கள் மத்தியில் பரவி காணப்படுகின்றது.
இப்படியான மஞ்சள் குலைகள் நெல்லை மாநகரான அருகன் குளம், சேந்திமங்கலம், டவுண் உள்ளிட்ட பல பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது, பொங்கலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன் 6 மாத பயிரான இம்மஞ்சள் அறுவடை செய்யப்படும், இன்னும் ஓரிரு தினங்களில் இங்குள்ள மஞ்சள் அறுவடை செய்ய தயாராக உள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவ மழையால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மஞ்சள் விளைச்சல்
அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த ஆண்டு 10 ஆயிரத்திற்கு வாங்கி சென்ற வியாபாரிகள் கொரோனாவால் வியாபாரம் செய்ய முடியாமல் 3 ஆயிரம் நஷ்டத்தில் விற்பனை செய்ததாக தெரிவித்தனர், இந்தாண்டும் கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் எந்த ஒரு ஆண்டும் இல்லாதது போல இந்தாண்டு 1500 ரூபாய் குறைத்து வியாபாரிகளிடம் கொடுத்து உள்ளோம், மழையினால் அதிக விளைச்சல் இருந்தும் நஷ்டத்தை தான் சந்தித்து வருகிறோம் என தெரிவிக்கின்றனர் மஞ்சள் விவசாயிகள்.
மேலும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அதில் சேர்க்கப்பட்டு உள்ளது. அதில் மஞ்சள் என்பது இல்லை, அதனையும் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும், குறிப்பாக விவசாயிகளிடம் இருந்து அரசே மஞ்சள் குலைகளை நேரடி கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும், அவ்வாறு மஞ்சள் நேரடி கொள்முதல் செய்து அரசு சார்பில் உரிய விலை நிர்ணயமிட்டு வழங்கும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர் விவசாயிகள்.
இந்த சூழலில் தென் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகின்றது, இதன் காரணமாக மஞ்சள் விவசாயிகள் கலக்கம் அடைந்து உள்ளனர். முழுமையாக அறுவடை செய்து விற்பனை செய்ய முடியுமா? அல்லது மழையினால் பாதிப்பு ஏற்படுமா என தெரியாமல் பொங்கல் பண்டிகையை நோக்கி அதனை மங்களகரமாக கொண்டாடும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் விவசாயிகள்.....