"தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் தலை சிறந்ததாகவும், தனி சிறப்புடையதாகவும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தை மாதம் முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது" இயற்கை வளங்கள் நிறைந்த தமிழகப் பகுதிகளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த தமிழர்கள் இயற்கையை வழிபடுவதையும், இயற்கைக்கு நன்றி செலுத்துவதையும் தம்முடைய பழக்க வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படியாக தமிழர்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவித்து" உழவுக்கு வந்தனை செய்வோம்" என்பதற்கிணங்க இயற்கையில் விளைந்த நெல், கரும்பு, வாழை காய், கனி, தானியங்களைப் இயற்கை தெய்வமான சூரியனுக்கு படைத்து உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பசு, கன்று காளைமாடு போன்ற உயிரினங்களையும் சிறப்பிக்கும் வகையில் அவற்றிற்கும் விழா எடுப்பதே இன்றுவரை தமிழர்களின் பண்பாடாக இருந்து வருகிறது.
சரி இந்த பண்டிகையை மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், சிறு வீட்டுப் பொங்கல், என தை மாதத்தில் அடுத்தடுத்து ஒவ்வொரு வகையில் தமிழர்களால் கொண்டாடப்படுவது ஏன்? இப்பொங்கல் ஆரம்ப காலத்தில் எப்படி கொண்டாடப்பட்டது? என்ற நம்முடைய கேள்விகளை மேனாள் தமிழ்துறை தலைவர் முனைவர் வே. கட்டளை கைலாசம் அவர்களிடம் கேட்கும்பொழுது அவர் நம்மிடம் தெரிவித்தது...
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று பொங்கல் விழா, "பொங்கல்" என்பது கஞ்சி வடிக்காது சமைத்த அன்னம் என்பதாகும், பொங்குதல், செழிப்பின் வெளிப்பாடு, மிகுதியினால் வெளிவருவது, செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போகாமல் சரிநீர் வைத்துச் சமைத்து, பருப்புக் குழம்புடன் உண்பது பொங்கல் மரபு, "பருப்புக் கேட்கும் பச்சரிச் சோறு, செருப்புக் கேட்கும் சித்திரை மாத வெயிலில் " என்பது பழமொழி..
தை மாதம் முதல்நாள் தமிழர்களால் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது, சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது, பிற மாநிலத்தவர் சூரிய வழிபாட்டு நாளை மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர், தமிழர்கள் பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர், சிலப்பதிகாரம் திங்களையும், ஞாயிரையும், மாமழையையும் போற்றி வணங்கி தொடங்குகின்றது,
தமிழர் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டு வரும் மரபினர், தை மாதத்தைச் சிறப்பாக கொண்டாடி வந்த தமிழரின் இலக்கியங்கள் "தைஇத் திங்கள தண் கயம் படியும்" என்று நற்றிணையிலும், "தைத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையிலும் "தைத்திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூற்றிலும், ஐங்குறுநூறிலும் பதிவு செய்துள்ளன, "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" எனக் கலித் தொகையும் கூறுகிறது.
தமிழர் கொண்டாடும் பொங்கல் விழாவினை ஐந்து நிலைகளில் காண முடிகிறது, மார்கழி இறுதிநாள் போகி என்று கூறி பழையன கழிந்து புதியன புகுந்து கின்றனர், தை மாதம் முதல் நாளன்று தைப் பொங்கல் விழா, இதனையடுத்து உழவுக்கு துணைநின்ற மாடுகளுக்கு நன்றி செலுத்த மாட்டுப்பொங்கல் என்றும், அதற்கு அடுத்த நாள் பெரியவர்களைக் கண்டு ஆசிபெற்று வருவதைக் காணும் பொங்கல் என்றும் கூறுகின்றனர். சிறு பெண்கள் சிறிய வீடு அமைத்து பொங்கலிடும் சிறு வீட்டுப் பொங்கல் பெரும்பாலும் பூச நட்சத்தரத்தன்று கொண்டாடுவது வழக்கம், தை மாதத்தின் வேறு நாட்களிலும் தென்மாவட்டத்தில் குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடி வருகின்றனர் என்று தெரிவித்தார்,
காணும் பொங்கல், சிறு வீட்டு பொங்கல் என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என அவரிடம் கேட்டப்போது அவர் விவரித்து கூற ஆரம்பித்தார்.
காணும் பொங்கல்:
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் என பலரையும் கண்டு மகிழ்வது " காணும் பொங்கல் " இந்தநாளில் வயதில் முதியவர்களை வணங்கி அருள் பெறுவது வழக்கம், உழைப்பாளிகள் கலைஞர்கள் என பலரும் நன்றி தெரிவிக்கும் நோக்கில் தமக்கு உதவியவர்களைக் கண்டு வருவர், அவர்களும் அன்பையும் பரிசையும் வழங்கி வாழ்த்துவர், குறிப்பாக இது பொங்கல் படி கொடுத்தல் என்றே கூறப்படுகிறது,
கிராமங்களில் நாதஸ்வர வித்வான் போன்ற பல கலைஞர்களும், ஊரின் பொது வேலைகளைச் செய்வோர்களான லாந்தர் விளக்கு (மின்சாரம் வரும் முன் இருந்த கல்தூண் விளக்கு) ஏற்றுவோர், தெருக்களைச் சுத்தம் செய்வோர், மந்தை மேய்ப்போர் ( ஊரின் மாடுகளை மேய்ப்போர் ), நாட்டார் தெய்வ பூசாரிகள், ஊர்களில் துணி வெளுப்போர், முடி திருத்துவோர் என பல தொழிலாளர்கள் ஊராரிடம் பொங்கப்படி பெறுவது வழக்கமாக இருந்தது. காணும் பொங்கல் என்பது தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இருந்துள்ளது, ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகள், மலைப்பகுதிகளுக்கு பொங்கல் சோற்றினை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடும், நண்பர்களோடும் உண்டு மகிழ்வர் என்று கூறினார்.
சிறுவீட்டு பொங்கல்:
சங்க இலக்கியத்தில் சிறுவயதுப் பெண்கள் சிற்றில் கட்டி விளையாடுவதை 'பொய்தல்' 'வண்டல்' 'சிறுமனை' என்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றும் சிறு வயது உடைய அனைவரும் ஆற்றங்கரையில், கடற்கரையில் சிற்றில் கட்டி விளையாடுவதை காணலாம், சிறுமிகள் சிறுவீடு கட்டுவது என்பது சிறப்பான நிகழ்வு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களில் இதனை காணலாம், "சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி" என்று குறுந்தொகை கூறும் பாடலில் கடற்கரையில் சிறு வீடுகட்டி விளையாடிய போது தலைவனோடு ஏற்பட்ட நட்பு என்பாள் தலைவி, ஆண்டாள் நாச்சியார் சிற்றிலைக் கண்ணன் "கண்ணன் உடைக்கும் படர் ஓசையை வெள்ளை நுண் மணல் கண்டு சிற்றில் விசித்திருப்ப வீதி வாய்த் ......" என்பர்
பெரியாழ்வார் பாடலில் "சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே" என திவ்ய பிரபந்தத்தில் கண்ணனின் விளையாட்டினைப் புனைந்துள்ளார். தமிழில் பிள்ளைத் தமிழ் இலக்கியம் தோன்றிய போது பெண்பால் பிள்ளைத்தமிழில் "சிற்றில்" என்ற தலைப்பில் பத்து பாடல்கள் பாடப்பட்டுள்ளது,
அதாவது தமிழ் மரபில் பெண்கள் சிறுவீடு கட்டி விளையாடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இன்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சிறுவீடு கட்டி சிறுவீட்டுப் பொங்கல் விடுவதை காண முடிகிறது, மார்கழி மாத தொடக்கத்தில் இருந்தே பெண் பிள்ளைகள் வீட்டின் முன்னர் கோலமிட்டு சாணிப் பிள்ளையார் வைப்பர், அப்பிள்ளையாருக்கு பூசணி பூ வைப்பது வழக்கம், தை மாதப் பொங்கலுக்குப் பின்னர் வரும் பூச நட்சத்திரத்தில் பொதுவாக சிறு வீட்டுப் பொங்கல் விடுவர், தங்களுக்கு உகந்த நாட்களையும் தேர்ந்தெடுப்பர்,
வீட்டின் முற்றத்தில் குறுமணலால் சுவர் போல் கட்டி சிறு வீடு அமைப்பர், சிலர் காவியைக் கொண்டு சிறு வீட்டினை வரைவர், சிறுவீட்டுப் பொங்கல் அன்று பெண் பிள்ளைகள் பட்டாடை அணிந்து பொங்கல் விழா போலவே பொங்கலிட்டு மகிழ்வர், வீட்டின் முன்னர் தொடர்ந்து வைத்து வந்த சாணிப் பிள்ளையாரை எருவாகத் தட்டி வைத்திருப்பர், சிறு வீட்டுப் பொங்கலன்று அவற்றை எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து விடுவர், சிறு பெண்கள் கூடி மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு விழாவாக சிறு வீட்டுப் பொங்கல் உள்ளது என தமிழர்களின் பண்பாட்டில் பொங்கல் விழா இவ்வாறாகவே கொண்டாடப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இயற்கை நமக்களித்த செழிப்பினை கொண்டாடும் வகையிலும், அமைந்திருக்க வேண்டிய பொங்கல் கொண்டாட்டங்களைக் கேஸ் அடுப்பிலும், கரண்ட் அடுப்பிலும் புகையில்லா பொங்கல் என்று அடுப்பங்கரையிலேயே நவீன பொங்கலிட்டு தமிழர் திருநாளைக் கொண்டாடும் மக்களும் நம்மத்தியில் இன்றும் இருக்கிறார்கள். காலத்திற்கு ஏற்ப கலாச்சாரத்தை மக்கள் மாற்றினாலும், எந்த காலத்திலும் கலாச்சாரமும், அதன் அடிப்படையும் மாறாத ஒன்று.. அதற்கு அடையாளம் நம்முடைய தமிழ் இலக்கியங்களும், சுவடுகளுமே, மேலும் அவற்றைத் தம்முடைய தலையில் வைத்து தாங்கி நிற்கும் தமிழ் சான்றோர்களுமே என்பது மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் வே.கட்டளை கைலாசம் அவர்கள் கருத்தின் வழியே இங்கு புலப்பட்டது. இவ்வாறு தமிழர் பண்பாட்டின் அடையாளமாக நம் மத்தியில் நம்முடைய பல்வேறு செயல்பாடுகள் இருந்துகொண்டே இருக்கிறது நம்மையும் அறியாமலே!!!!!!!