நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கும்போது வெள்ள நீர் வழிந்தோடும் வகையிலும், விவசாய பாசனத்திற்காகவும் பாளையங்கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாளையங்கால்வாயானது நெல்லை மேலச்செவல் அருகே மாணிக்க நகர் பகுதி வழியாக செல்கிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த  நிலையில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பாளையங்கால்வாய் பகுதியை கடந்து தான் மயானத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்துள்ளது. 


மேலும் கால்வாயில் தண்ணீரின் வரத்து அதிகம் வரும் வேளையில்  மேலச்செவல் மாணிக்க நகர் பகுதியில் இருந்து மயானம் பகுதிக்கு  கடந்து செல்ல பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2007 ஆண்டு  அப்பகுதியில் பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பாலமானது கடந்த 2  ஆண்டுகளுக்கு முன் வந்த வெள்ள நீரால் சேதமான நிலையில் அடித்து செல்லப்பட்டது. இந்த சூழலில் தற்போது வரை இந்த பாலம் சீரமைக்கப்படாமலும் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை கால்வாயின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு கயிறு கட்டி அதனை பிடித்துக் கொண்டு கழுத்தளவு நீரில் உடலை தூக்கி வரும் அவல  நிலையே நீடித்து வருகிறது. மேலும் உடைந்த பாலத்தை சரி செய்ய பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.




இந்த நிலையில் இன்று கழுத்தளவு தண்ணீரில் கரையின் இருபுறமும் கயிறு கட்டி அதை பிடித்து கொண்டே அப்பகுதியில் காலமான 92 வயது முதியவர் குலசேகரன் என்பவரின் உடலை கழுத்தளவு நீரில் அபாயகரமாக சுமந்து செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. சிறிது தவறினாலும் இறந்தவரின் உடலை கொண்டு சென்றவர்கள் நீரில் மூழ்கும் அவல நிலை உள்ளது. எனவே மேலச்செவல்  அருகே மாணிக்க நகர் பகுதியில் இருந்து மயானம் செல்லும் பகுதியில் பாளையங்கால்வாயை கடக்க புதிய பாலத்தை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...








 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண