கன்னியகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு அரியவகை தாதுகள் கடற்கரை மணலில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் மணலில் கதிர்வீச்சு அதிகம் நிறைந்த யுரேனியம், தோரியம் போன்ற பல தாதுக்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு செயல்படும் மணல் ஆலையால் இந்த பகுதிகளில் கதிரியக்கம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது ஏராளமான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 



 

இந்நிலையில் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனத்தை மூடவேண்டும் என குமரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு மணல் ஆலை நிறுவனத்துக்கு கீழ்மிடாலம், மிடாலம், இனயம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களில் இருந்து 1144 ஹெக்டேர் நிலப்பகுதியில் மணல் அகழ்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடலோர வளர்ச்சி மற்றும் அமைதி குழு இயக்குனர் டன்ஸ்டன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது. கடலோரப் பகுதிகளில் கனிம மணல் அள்ளுவதால் கடல் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கடற்கரை கிராமங்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை உள்ளது. கடலரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் தூண்டில் வளைவு உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. ஆனால் அதே சமயம் நீண்ட கடற்கரையை இயற்கையாக பெற்றிருந்த குமரி மாவட்டம் அதை இழந்துவிட்டது. கடற்கரை மணல் அகழ்வு நடப்பதால் கதிரியக்கம் பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோயால் கடற்கரை மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்."

 



 

மணல் ஆலைக்கு அருகில் இருக்கும் கடற்கரை கிராம மக்கள் ஆண்டிற்கு ஏறக்குறைய 100 பேர் புற்றுநோய்க்கு உயிரிழந்து வருகிறார்கள். எனவே கடலரிப்பு மற்றும் கதிரியக்க பாதிப்புகளை உருவாக்கும் மணல் ஆலையை உடனே மூடவேண்டும். இதை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசு மணல் ஆலை நிறுவனத்துக்கு கீழ்மிடாலம், மிடாலம், இனயம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களில் இருந்து 1144 ஹெக்டேர் நிலப்பகுதியில் மணல் அகழ்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அப்பகுதி மக்களிடம் எந்த கருத்து கேட்பும் நடத்தாமல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 



 

மக்களிடம் கருத்து கேட்டு இருந்தால் நாங்கள் குறைகளை தெரிவித்து இருந்திருப்போம். எனவே சுற்றுச்சூழலுக்கும், மக்கள் உயிருக்கும், கடற்கரை கிராமங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் மணல் அகழ்வு அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அதன் பிறகும் அனுமதியை ரத்து செய்யவில்லை எனில் மாவட்ட அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பங்குதந்தை சூசை ஆன்டனி, மீனவர் பிரதிநிதிகள் பிரான்சிஸ், சேவியர் மனோகரன், மரிய தாசன், மெர்பின் உள்பட பலர் உடன் இருந்தனர்.