தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் 30 வார்டுகளை கொண்ட நகராட்சி ஆகும். 30 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் என அனைத்தும் சங்கரன்கோவில் - திருவேங்கடம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே கொட்டப்படுகிறது. இதில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை பிரித்து எடுக்கப்பட்டு மக்கும் குப்பைகள் பிரத்யோக இயந்திரங்கள் மூலம் உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது.






இந்த வகையில் மட்டும் சங்கரன்கோவில் நகராட்சி ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்காத குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு பின்னர் அவை தரம் பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக், அலுமினியம், இரும்பு போன்ற இன்னும் பிற கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள பீங்கான் மற்றும் கண்ணாடி கழிவுகள் தேக்கி வைக்க பிரத்யோக இட வசதி உள்ளது.



மேலும் சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமாக 15 கோடி ரூபாய் மதிப்பில் கழிவு மேலாண்மைக்காக பிரத்யோக இயந்திரங்கள் மற்றும் பல இடங்களில் அதற்கான கழிவு மேலாண்மை நிலையங்கள் உள்ளன. 30 வார்டுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்கும் பணியை ஏ.வி.எம் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டு அது செயல்பாட்டில் உள்ளது. கழிவு மேலாண்மைக்கான இவ்வளவு வசதிகள் இருந்தும் சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் நிர்வாக திறனின்மை காரணமாக மொத்த குப்பைகளும் புதிய பேருந்து நிலையம் அருகே மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இந்த குப்பை கிடங்கை சுற்றி 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வழிபாட்டு தளங்கள், பள்ளி கூடங்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் கோடை காலம் முடியும் தருவாயில் கிடங்கில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கோடை கால வெயில் காய்ந்து சருகாகி தீப்பிடித்து எரிவதும், அதை சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வந்து அணைப்பதும் வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் தான் இந்த ஒரே வாரத்தில் நகராட்சியின் குப்பை கிடங்கில் மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பெரும் புகை மூட்டத்துடன் ஏற்ப்பட்ட தீ விபத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் அருகில் வசிக்கும் குடியிருப்புகள் வாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.



இன்று நிகழ்ந்த தீ விபத்தால் சாலையின் எதிரில் வரும் வாகனம் தெரியாத அளவிற்கு அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக சங்கரன்கோவில் - திருவேங்கடம் சாலை, சங்கரன்கோவில் - கழுகுமலை சாலை வழியாக செல்லக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. புகை மூட்டத்தின் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாகினர். பின்னர் நகராட்சி அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில் தீயை அணைக்க வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


மேலும் இன்று திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்த போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தீ வைத்ததாக கூறினர். ஆனால் கழிவுகளை முறைப்படி கையாளததால் பணி சுமையை குறைக்க நகராட்சி அதிகாரிகளே தீ வைத்து விட்டு சமூக விரோதிகள் யாரோ தீ வைத்ததாக கூறி நாடகமாடுவதாக குற்றம் சாட்டுகின்றனர் விபரம் அறிந்தவர்கள் சிலர். குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதற்கு குப்பைகளை முறையாக தரம் பிரித்து கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தாதே காரணம் என்றும், நகராட்சி நிர்வாகம் சரியான திட்டமிடுதலுடன் அன்றாடம் வரும் கழிவுகளை தரம் பிரித்து அவற்றை முறையாக கையாண்டால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்றும்  பொதுமக்கள் கூறுகின்றனர்.