எட்டயபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைத்த உணவை பெற்றோர்களின் வற்புறுத்தலால் மாணவ மாணவிகள் சாப்பிடாமல் புறக்கணித்த விவகாரம்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்டது உசிலம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 11 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த முனிய செல்வி (29) என்பவர் பணியமர்த்தப்பட்டார். இவர் கடந்த 25 ஆம் தேதி முதல் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையல் செய்து மாணவ மாணவிகளுக்கு வழங்கி உள்ளார். ஆனால் மாணவ மாணவிகள் பெற்றோர்களின் வற்புறுத்தலால் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்து உள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சமையலர் முனிய செல்வி தனது மேலதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பள்ளிக்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்கள் தரப்பில் சமையலர் முனிய செல்வியை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
அரசு விதிகளை பின்பற்றி தான் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கிராம மக்களின் கோரிக்கை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்த தகவல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உசிலம்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று அங்கு பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், "உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே சாப்பிடுவதாகவும்...... மற்ற மாணவர்கள் தவிர்ப்பதாகவும் தகவல் வந்தது. ஆகவே நேரில் ஆய்வு செய்ய வந்தேன். பள்ளி மாணவ மாணவிகளுடன் பேசினேன். அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. தனிப்பட்ட விரோதத்தில் சமையலர் பெண்ணுடன் சண்டை போட்டவர்கள் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு நாளையே முற்றுப்புள்ளி வைக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சமையலர் முனிய செல்வி கூறுகையில்," இந்த பள்ளியில் தான் என்னுடைய குழந்தைகளும் படிக்கின்றனர். நான் அரசு விதிகளின் படி தான் சமையலராக நியமிக்கப்பட்டேன். ஆனால் பெற்றோர்கள் ஒரு சிலரின் சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமைத்த உணவை மாணவ மாணவிகளை சாப்பிட விடாமல் தடுப்பது மன வேதனை அளிக்கிறது. கடந்த பத்து நாட்களாக சமைத்த உணவு வீணாகிறது. இதற்கு அரசு அதிகாரிகள் ஒரு சமூக தீர்வு காண முன் வரவேண்டும்" என்றார்.
கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் பள்ளிக்கு வந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது பேசிய ஊர் மக்கள் எங்களுக்கும் சமையலர் முனிய செல்வியின் கணவருக்குமான தனிப்பட்ட பிரச்சினையில் தான் குழந்தைகளை சாப்பிட அனுப்பவில்லை இதில் ஜாதி பிரச்சனை ஏதுமில்லை அதே சம்பவத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணை காலை உணவு திட்ட சமையலராக நியமிக்க வேண்டும் என்றனர். மாற்று நபர் நியமிக்க கால அவகாசம் தேவை அதுவரை குழந்தைகள் சாப்பிடுவதை தடுக்க கூடாது என கோட்டாட்சியர் தெரிவித்தனர் இதற்கு பெற்றோர்களும் சம்மதித்தனர்.