தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.




தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்து வந்தனர். பால் தாமதமாகவும், அளவு குறைவாக வினியோகம் செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு பால் வினியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. தகவல் அறிந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன், பொது மேலாளர்கள் ராஜ்குமார்,தியானேஷ் பாபு மற்றும் ஆவின் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணம் என்ன அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 




பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் பால் வரவில்லை. அதையும் சரி செய்து விட்டோம். இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பால் தட்டுப்பாடு உள்ளது. மாவட்டத்தில் 26 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படக்கூடிய தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதனை சரி செய்து விடுவோம். கூடுதலாக பால் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.




பால் அளவு குறைவு என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. மூன்று விதமான ஆய்வுகளுக்கு பிறகுதான் பால் விநியோகம் செய்யப்படுகிறது. தரக்கட்டுப்பாடு உணவு கட்டுப்பாடு மற்றும் ஆவின் என்ஜினீயர்கள் ஆய்வுக்குப் பிறகு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் எந்தவித காரணத்தை கொண்டும் அளவு குறைவு இருப்பதற்கான வாய்ப்பு கிடையாது. விவசாயிகளுக்கு சமீபத்தில் கொள்முதல் விலையும் ரூ.35 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆவின் தனி பிராண்டாக உள்ளது. எந்தவித கலப்படமும் இல்லாமல் பால் வழங்கப்படுகிறது. ஆவின் வியாபார நோக்கத்தோடு செயல்படும் நிறுவனம் அல்ல. பொதுமக்கள் சேவைக்காக இயங்கி வருகிறது. கடந்த தீபாவளியை முன்னிட்டு இனிப்பு விற்பனையில், மற்ற தனியாருக்கு நாங்கள் போட்டியாக மாறிவிட்டோம். ரூ.140 கோடி வரை இனிப்புகள் விற்பனையானது. ஐஸ்கிரீம் விற்பனையிலும் தனிக் கவனம் செலுத்தி, அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களுக்கும் அதனை கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.