நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஐஜி பழனி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக  நன்னடத்தை சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் படிப்படியாக சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு வருவது தொடர்பாகவும், சிறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்றாட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நன்னடத்தை கைதிகளை கொண்டு சிறைகளில் செயல்பட்டு வரும் சிறை அங்காடி மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டார். நன்னடத்தை சிறைவாசிகளை கொண்டு இயக்கப்பட்டு வரும் பெட்ரோல் நிலையத்தில் பொதுமக்கள் சிறைவாசிகளுக்கான மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். தொடர்ந்து முதலமைச்சரின் என் மஞ்சள் பைத்திட்டத்தையும் செயல்படுத்தி வைத்த சிறைத்துறை டிஐஜி பழனி செய்தியாளர்களை சந்தித்தார்.





அப்போது பேசிய அவர், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளை கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் ஐந்தரை கோடி வரை  லாபம் ஈட்டி உள்ளது, தமிழகத்தில் நன்னடத்தை சிறைவாசிகளை கொண்டு ஐந்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 5 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளை கொண்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவித்தார். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையை பொருத்தவரையில் தடை செய்யப்பட்ட கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள் நடமாட்டம் குறைந்திருப்பதாகவும், அந்த கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




மேலும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இருந்து 63 நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்த அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 8 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைகளுக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்படும் மோதலை தடுக்க தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறைத்துறை டிஐஜி பழனி கடந்த காலங்களில் நடந்தது போன்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஜாதி ரீதியிலான மோதல் ஏற்படாமல் இருக்க சிறைவாசிகளுக்கு தனித்தனியே அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மேலும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண