தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் நெல்லையில் கடந்த் சில நாட்களாக பருவமழை அதிக அளவில் பெய்து வந்தது, நேற்று மாலையில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து நீடித்த கனமழை பெய்தது, இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மேலும் மாநகரில் உள்ள மனகவலம்பிள்ளை மருத்துவமனை, பாளை திரிபுராந்தீஸ்வரர் (சிவன்) கோவில், பகுதிகளிலும், செந்தில் நகர், அன்பு நகர், சேவியர் காலணி, பரணி நகர், ராஜேந்திரா நகர், எம்கேபி நகர், சீவலப்பேரி சாலை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்பிற்குள்ளும் மழைநீர் புகுந்தது.
தற்காலிக புதிய பேருந்து நிலையத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் பயணிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்தனர், இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். அதே போல நெல்லையப்பர் கோவில் முன் பகுதியிலும், டவுண் கரிய மாணிக்க பெருமாள் கோவிலிலும் மழை நீர் தேங்கியது, பழைய ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் தொடர் மழையினால் மண்சரிவு ஏற்பட்டது பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, பின்னர் அதனை ஜேசிபி இயந்திரம் மூலம் சரி செய்தனர்.
பின்னர் அன்பு நகர் பகுதியில் சாலை இரண்டாக பிரிக்கப்பட்டு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல் அன்பு நகர் குடியிருப்புக்கள் தண்ணீர் புகுந்தது, அங்கும் சட்டமன்ற உறுப்பினர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். குடியிருப்பு பகுதியில் இருந்து பலர் காலி செய்துவிட்ட நிலையில் அங்கிருக்கும் ஒரு சில குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த சென்டர் மீடியனை இடித்து தண்ணீர் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல நெல்லையில் நேற்று பெய்த தொடர்மழை காரணமாக பல இடங்களில் மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது, அதனையும் மின்வாரிய பணியாளர்கள் சரி செய்தனர், இந்த நிலையில் தொடர் மழை காரணமாகவும் இன்று பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தியதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்