சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்எல்சி  அனல் மின் நிலையத்தில் வழங்குவது போன்று என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ஈஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக என்டிபிஎல் நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கடந்த 13-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் சுமார் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.




போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் என்டிபிஎல் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்தவித சுமூக முடிவும் ஏற்படவில்லை. இதனால் தொழிலாளர்களிள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் கடந்த 8 நாட்களாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1000 மெகாவாட் திறன் கொண்ட இந்த அனல்மின் நிலையத்தில் குறைந்தபட்ச அளவான 560 முதல் 600 மெகாவாட் அளவுக்கே மின் உற்பத்தி உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் அனல்மின் நிலையத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை தொழிளாளர் ஆணையர் அருண்குமார் தலைமையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன்,  செயலாளர் ரசல், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் என்டிபிஎல் சார்பில் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சமூக முடிவு ஏற்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற என்டிபிஎல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். 




இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தெரிவித்துள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மே 5-ம் தேதிக்குள் ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் மே 5-ம் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தெரிவித்து உள்ளது.