சட்டப் பேரவையில் அறிவித்தப்படி திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தில் தூண்டில் பாலம் அமைக்காத தமிழக அரசை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். கருப்புக்கொடி ஏந்தி 195 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டது.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் மீனவ கிராமத்தில் தூண்டி பாலம் அமைக்காத தமிழக அரசை கண்டித்து அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ளது அமலிநகர் மீனவ கிராமம், இங்கு 195 படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழில் செய்து 2,000 மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி அடுத்துள்ள வீரபாண்டிய பட்டிணம், மணப்பாடு போன்ற கடற்கரை கிராமங்களில் தூண்டில் பாலம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமலிநகர் மற்றும் ஜீவாநகர் ஆகிய மீனவ கிராம பகுதியில் தூண்டில் பாலம் அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை வைத்ததை, தொடர்ந்து, கடந்தாண்டு நடைபெற்ற (2022-2023) சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் ரூ 83 கோடி செலவில் அமலிநகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் கடல் அரிப்பினை தடுத்து படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தூண்டில் பாலம் அமைக்க எந்தவித முன்னேற்பாடுகளும் நடைபெறவில்லை. 




இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.எனவே தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ரூ83 கோடி ரூபாய் செலவில் அமலிநகர் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்கும் தூண்டில் வளைவுகள் அமைத்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் கருப்புக்கொடி ஏந்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.