ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் குடிதண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலை பொதுமக்களிடமிருந்து பெற்று அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ரூபாயும், ரசீதும் வழங்கும் "நெகிழி இல்லா நெல்லை" என்ற திட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை முறையில் நெல்லை டவுண் பகுதியில் மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் வைத்து நெகிழி இல்லா நெல்லை என்ற திட்டத்தை  மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழியும் எடுத்துக்கொண்டனர். பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்து அதற்கு பதிலாக ஒரு ரூபாய் ஊக்க தொகையும் ரசீதும் பெற்று சென்றனர்.




பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் மாசடையும் நிலையில் அதிலிருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒரு வருட காலமாக  நெல்லை மாநகராட்சி சார்பில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் பொது இடங்களில் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதில் சிறப்பு நிகழ்வாக  நெகிழி இல்லா நெல்லை  திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பொது இடங்களில் இருந்து சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் மக்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும். மக்களையும் இதில் பங்கு பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு ரூபாய் என்பது அந்த பாட்டிலுக்கான விலை கிடையாது. மக்களுக்கான ஊக்கத்தொகை.




இந்த வருடத்தில் மாநகர பகுதிகளிலிருந்து பத்து லட்சம் பாட்டில்கள் சேகரிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். குறிப்பாக இந்த பாட்டில்கள் பாதாள சாக்கடை மற்றும் மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும் பாதைகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. பூமி மாசுபடுவதற்கு இந்த பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக உள்ளது. எனவே இந்தத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். இதற்கு முன்னாடியாக டவுண் பகுதியில் இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் நடத்தியபோது ஒரு வாரத்தில் 22 ஆயிரம் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகரப் பகுதிகளில் 15 இடங்களில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். மேலும் இதை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்திலும் அனுமதி கிடைத்தவுடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்