தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் 204 பஞ்சாயத்து தலைவர்கள், 1,731 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 122 யூனியன் வார்டு உறுப்பினர்கள், 12 மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் நேரடியாக வாக்காளர்களால் வாக்களித்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.



 

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மந்தகதியில் இருந்த வேட்புமனு தாக்கல் நேற்று விறுவிறுப்பு அடைந்தது. யூனியன் அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,885 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேற்று முன்தினம் வரை 218 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று மேலும் 483 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 701 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏற்கனவே 870 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,234 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

 

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிழக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்  மற்றும்  7 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் . 



 

இதனைத் தொடர்ந்து நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 12 பதவியிடங்கள் உள்ளது. இதில் 9 இடங்கள் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்டு வருகிறது. இதில் 8 இடங்களில் திமுக போட்டி போடுகிறது. ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது  அதே போன்று  கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், பாளையங்கோட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் 89 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடம் உள்ளது.



 

இதில் 76 இடங்களில் திமுக போட்டியிடுகிறது காங்கிரஸ் 9 இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் கூட்டணிக் கட்சிகளுக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  தோ்தல் பொறுப்பாளராக அம்பாசமுத்திரம், நெல்லை தொகுதிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ராதாபுரம் தொகுதிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், நாங்குநேரி தொகுதிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜூம் , நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் எனவே நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட துணை செயலாளர் சித்திக், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம் , வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி ,  மற்றும் கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்