நெல்லை டவுண் கன்னியாகுடி தெருவைச் சேர்ந்தவர் அன்வர். கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை டவுண் குன்னத்தூர் சாலை அருகே உள்ள கால்வாயின் கரையில் நிற்கும் பழமையான மருத மரத்தில் ஏறி உள்ளார். பின் அந்த மரத்தின் உச்சி கிளைக்கு சென்று அமர்ந்து கொண்டு கூச்சலிட்டார். தொடர்ந்து தனது குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையெனில் மரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்த படி கூச்சலிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதோடு அவரை கீழே இறங்கி வருமாறு கூறினார். தொடர்ந்து அவர் இறங்கி வராததால் மரத்தின் அருகே இருந்த மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் கீழே இறங்க மறுத்தார். உடனடியாக இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அவர் கீழே விழுந்தாலும் அவரை பாதுகாப்பாக மீட்கும் வகையில் பெரிய துணியை விரித்து மெத்தை அமைத்தனர்.
அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் கயிறுடன் மரத்தில் ஏறினர். அன்வரின் அருகில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென பிளேடால் தனது கையை கிழித்து கொண்டார். பின் இரத்தம் பீறிட்டது.. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அன்வர் மரத்தில் இருந்து இறங்க சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து அவரை கீழே இறக்கி கொண்டு வந்தனர். ஆனால் பாதி வழியில் அன்வர் திடீரென மயக்கமடைந்தார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கொண்டு சென்ற கயிறால் அவரை கட்டி பாதுகாப்பாக கீழே இறக்கினர். பின் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸின் உதவியுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக நெல்லை டவுண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி வாலிபர் ஒருவர் மரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்