நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் திவ்யா. இவர் கீழ நத்தத்தில் உள்ள கண் திறந்த அம்மன் கோவில் கொடை விழாவிற்கு தனது உறவினர் நம்பி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நம்பியின் வீட்டின் பீரோவில் இருந்த சுமார் 46 பவுன் தங்க நகைகளை யாருக்கும் தெரியாமல் திருடி விட்டு அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வீட்டில் பீரோவில் இருந்த நகைகளை எடுக்க பீரோவை திறந்து பார்த்த போது நகைகள் இல்லாததை கண்டு நம்பி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காணாமல் போன நகைகளை மீட்டுத் தருமாறு நம்பி அருகே உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகைகள் எவ்வாறு காணாமல் போனது என விசாரணையை தொடங்கினர். அப்போது வீட்டிற்கு வந்து சென்றவர்கள் குறித்த தகவல்களை சேகரித்த காவல்துறையினர் திவ்யாவிடம் விசாரித்துள்ளனர். முதலில் தனக்கு தெரியாதது போல் நாடகமாடிய திவ்யா, பின்னர் தான் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் திருடிய நகைகளை காவல்துறையினர் கேட்டபோது அதனை நெல்லை மாவட்ட அதிமுக அம்மா பேரவை துணை செயலாளர் பாண்டியராஜன் மூலம் ஒரு வங்கியில் அடகு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தாலுகா காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த இருவரையும் இன்று கைது செய்தனர். தொடர்ந்து வங்கியில் உள்ள நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கைதான திவ்யா ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்துள்ளார். பின்னர் கடந்த 2016ல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அவர் 2018 வரை அமமுகவில் இளைஞர் பாசறை செயலாளர் பதவி வகித்துள்ளார். அதன் பின்னர் அமமுகவில் இருந்து விலகி தற்போது அதிமுக கட்சியில் இருந்து வருகிறார். திருட்டு வழக்கில் அதிமுகவை சேர்ந்த பெண் பிரமுகர் மற்றும் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் இருவரும் கூட்டாக கைதான சம்பவம் நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்