நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள் வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள பாபநாசம், கடையம், களக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மேற்குத்தொடரச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்த வன விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலை அடிவாரத்தில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கரடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகளும், பொதுமக்களும் வன விலங்குகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். 


குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டைவிளைபட்டியில் கரடி தாக்கியதில் பெண் ஒருவர் காயமடைந்த  நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.   இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒரு வாரத்தில் டாணா பகுதியில் இரவு நேரத்தில் கரடி சுற்றி திரிந்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதலங்களில் பரவியது. தொடர்ச்சியாக கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், பாபநாசம் சுற்று வட்டார பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிப்பதோடு ஊருக்குள் புகாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பின்னர் கடந்த நவம்பர் 2022 ஆண்டு கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் ஊருக்குள் புகுந்த கரடி 3 பேரை கடுமையாக தாக்கியது. பின் அந்த கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது உயிரிழந்தது. அதன் பின்னர் லோயர் டேம் பகுதியிலும் டாணா பகுதியிலும் கரடி குட்டியுடன் சுற்றி திரிந்த வீடியோ வைரல் ஆனது. 


இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதியில் இரவு நேரங்களில் விக்கிரமசிங்கரபுரம் அருகே சிவந்திபுரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று நடமாடுவது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிவந்திபுரம் பேருந்து நிலையத்தில் மெயின் சாலையில் நள்ளிரவில் வாகனங்கள் செல்லும் வழியில் கரடி சுற்றி திரிவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குறிப்பாக சிவந்திபுரம் கிராமம்  மலையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அப்படியிருக்க இந்த பகுதிக்குள் கரடி எவ்வாறு வந்தது என பொதுமக்கள் மத்தியல் ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் கரடியை  கண்காணித்து வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..