சாலைக்கு பெயர் சூட்டுதல்:-
நெல்லை கண்ணன் நினைவாக அவரது பெயரை நெல்லை டவுண் பார்வதி திரையரங்கம் அருகிலுள்ள வளைவு முதல் குறுக்குத் துறை சாலையில் இணையும் தென் வடல் சாலைக்கு பெயர் சூட்ட வேண்டும் என நெல்லை மாநகராட்சியில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று டவுண் குறுக்குத்துறை செல்லும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயரை சூட்டும் விழா மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு நெல்லை கண்ணனின் மகன் சுகா முன்னிலையில் ”நெல்லை கண்ணன் சாலை” என பெயர் சூட்டி, பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் அந்த சாலையில் மேயர், நெல்லை கண்ணன் குடும்பத்தினர் அனைவரும் நடந்து சென்றனர். பொதுமக்கள் அந்த சாலையில் நடந்து சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் மகேஷ்வரி, ரேவதி, மற்றும் தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
வாழ்க்கை வரலாறு:-
நெல்லை டவுணைச் சேர்ந்தவர் நெல்லை கண்ணன். இவர் ஜனவரி 27,1945 ஆம் ஆண்டு பிறந்தவர், பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி, அரசியல் பேச்சாளர் என நெல்லை கண்ணன் பன்முக திறமை கொண்டிருந்தார். இவர் தனது மேடைப்பேச்சுகளில் அதிரடியாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து பொது மேடையில் அவதூறு பேசியதாக கூறி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் நெல்லை உள்ளூர் வழக்காடு மொழியில் பேசும் இவரது பேச்சு பலரும் ரசிக்கும் வகையில் இருக்கும். காமராஜர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர். எனவே அனைத்து மேடைகளிலும் காமராஜரை பற்றி பெருமையாக பேசுவார். குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதியே போன்ற நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய குறுக்குத்துறை ரகசியங்கள் என்ற நூல் மிகவும் பிரபலமானது. நெல்லை கண்ணன் கடந்த ஆண்டு இதே நாள் ஆகஸ்ட் 18, 2022 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
பெயர் சூட்ட எதிர்ப்பு:-
முன்னதாக உயிரிழந்த நெல்லை கண்ணனின் நினைவாக சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயரை சூட்ட நெல்லை மாநகராட்சி முடிவு செய்தது. இது குறித்து கடந்த ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருந்தனர். அதே சமயம் நெல்லை கண்ணன் பல்வேறு மேடைகளில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக 1996ல் சென்னை சேப்பாக்கம் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் கலைஞர் கருணாநிதியை எதிர்த்து நெல்லை கண்ணன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். எனவே திமுக ஆட்சியில் எப்படி நெல்லை கண்ணனுக்கு அரசு மரியாதை கொடுக்கலாம் என ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்ற இருந்த தீர்மானம் திமுக கவுன்சிலர் சங்கர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக நமது தலைவர் கருணாநிதியை நெல்லை கண்ணன் திட்டினார். கலைஞரின் போஸ்டரில் சானம் பூசியவர் நெல்லை கண்ணன். அப்படி இருக்கும்போது எப்படி அவர் பெயரை சாலைக்கு சூட்டலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்
தீர்மானம் நிறைவேற்றம்:-
தொடர்ந்து நெல்லை மாநகர் பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு அவர் பெயர் சூட்ட முடிவு செய்து தமிழக அரசு முதன்மை செயலாளர் மூலம் மாநகராட்சிக்கு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் நெல்லைக்கண் பெயரை சாலைக்கு வைப்பதற்கான சிறப்பு கூட்டம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணைமேயர் ராஜூ மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நெல்லை கண்ணன் அவர்களின் பெயரை டவுண் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறையை இணைக்கும் சாலைக்கு பெயரிடுவது குறித்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அவசரக் கூட்டத்தில் இந்த ஒரே ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றியதுடன் கூட்டம் முடிவு பெற்றதாக மேயர் அறிவித்து சென்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இன்று சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டி அதனை திறந்து வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.