நெல்லை மாநகராட்சி சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்து நிலையங்கள் சீரமைத்தல் வணிக வளாகங்கள் விளையாட்டு அரங்குகள் சீரமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இங்கு மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. அரங்கத்தை சுற்றி இருபுறமும் இருக்கைகளுடன் கூடிய கேலரிகள் அமைக்கப்பட்டு நவீன மேற்கூரைகளும் அமைக்கப்பட்டது.




இந்த நிலையில் இன்று பிற்பகல் நெல்லை மாநகரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக பாளையங்கோட்டை பகுதியில் காற்று மிக பலமாக வீசிய நிலையில் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கேலரியின் மேற்கூரை ஒன்று காற்றில் பெயர்ந்து அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கூரை இலகுவாக அமைக்கப்பட்ட நிலையில் காற்றின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் மேற்கூரை அங்கும், இங்கும் ஆடி கீழே மேற்கூரையை தாங்கி பிடித்து கொண்டிருந்த  சிமெண்ட் கலவை உடைந்து மேற்கூரை தலைகீழாக சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக காலை மற்றும் மாலை மக்கள் இங்கு நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அதே போல் இளைஞர்கள், பெண்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இன்று பிற்பகல் நேரம் என்பதாலும் மழை பெய்த காரணத்தாலும் மைதானத்தில் ஆள் நடமாட்டம் இல்லை. மைதானம் சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலே நடைபெற்ற இந்த பெரும் விபத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.





ஏற்கனவே சரியான திட்டமிடல் இல்லாமல் மைதானம் மிக குறுகலாக அமைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு வீரர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இது போன்று சூழ்நிலையில் அரசின் அலட்சியத்தால் 14 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட மைதானத்தின் மேற்கூரை சாதாரண மழைக்கே இடிந்து விழுந்த சம்பவம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் தகவல் அறிந்து மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி மைதானத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விபத்து குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மழை மற்றும் வேகமான காற்று காரணமாக மேற்கூரை இடிந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண