கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அன்சூல் மிஸ்ரா பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

அரசு வழிகாட்டுதலின்படி விடுதியில் உள்ள மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? கழிவறை மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அன்சூல் மிஸ்ரா ஆய்வு நடத்தினார்,

 

 அப்போது கடலூர் மஞ்சக்குப்பம் ஆதிதிராவிட நல அரசினர் மாணவர் விடுதி மற்றும் செஞ்சி குமராபுரம் ஆதிதிராவிட நல அரசினர் கல்லூரி மாணவியர் விடுதிகளில் ஆய்வு செய்த அவர்  மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்ட உனவினை சுவைத்து பார்த்தார். மற்றும் சமையல் சேர்க்கப்படும் காய்கறிகளின் அளவு குறித்தும் அவர் கேட்டறிந்தார்.மேலும் விடுதிகளில் உள்ள கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.

 

தொடர்ந்து மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் வகுப்பறையை பார்வையிட்டார். வகுப்பறையில் ஆங்கில பாடத்திற்குரிய செயல்பாடுகள் மேற்கொண்டிருந்தனர்.



 

மாணவ-மாணவியர்கள் குழுக்களாக பிரிந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்திகளில் தான் அறிந்த வார்த்தைகள் வட்டமிட்டு படித்து வந்தனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா ஒருசில மாணவர்களை அழைத்து அவர்கள் வட்டமிட்ட வார்த்தைகளில் ஒன்றை கேட்டறிந்து, வகுப்பறையில் அவ்வார்த்தை ஒட்டப்பட்டுள்ளதை சுட்டி காட்ட சொல்லி கேட்டறிந்தார்.

 

 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களோடு கலந்துரையாடி, அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் -ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்துள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் காலை உணவு திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் குறித்தும் கலந்துரையாடினார்.

 

 



 

ஆய்வு நடத்திய கண்காணிப்பு அதிகாரியிடம் பெற்றோர்கள் தெரிவிக்கையில், சுவையான காலை உணவு வழங்கப்படுவதால் பள்ளி நேரத்திற்கு முன்பாகவே ஆர்வத்துடன் வருகிறார்கள். எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் பிள்ளைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர் என தெரிவித்தனர். தொடர்ந்து  அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இராமகிருட்டிணன், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் செல்வபாண்டியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.