தொடர் கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் அருகே செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது, அதன்படி நெல்லை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது, நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை  பெய்து வந்தது. 



 

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்மழை பெய்து வந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் மற்றும் சேர்வலாறு ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக பிரதான அணைகள் முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்  காரணமாக தாமிரபரணி ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 



 

தாமிரபரணி ஆற்றில்  சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது, இதனால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளை தொடர்ந்து மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறையினர் கண்காணித்து வருகின்றனர், மேலும் மறு உத்தரவு வரும் வரை தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது, அதே போல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, 



 

இது ஒரு புறம் இருக்க ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் வடகிழக்கு பருவமழையால் தென் தமிழகம் முழுமையாக பயனடையும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும், அவ்வாறு வெளியேற்றப்படும் உபரி நீரானது ஆற்றின் வழியாக தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை சென்று  இறுதியாக கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல டிஎம்சி  தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க வேண்டும், அதனை சேமித்து வைக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.