நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசன் ராஜா நெல்லை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமாறு மனு அளித்துள்ளனர். மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில் 60% கவுன்சிலர்கள் அதாவது 33 கவுன்சிலர்கள் மனு அளித்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். எனவே இவ்வாறு கொண்டு வரும் போது மாநகராட்சி கமிஷனர் அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.


தற்போது உள்ள நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மிகவும் நேர்மையான நபராக இருப்பதால் கண்டிப்பாக இதை செய்வார் என்று நம்புகிறோம். நெல்லை மாநகராட்சி உறுப்பினர்கள் போராடுவது சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்டவை தொடர்பான பிரச்சனைகளுக்கு இல்லை. காண்ட்ராக்டர் மற்றும் தொழிலதிபர்களிடம் வாங்கிய வசூல் பணத்தை பங்கு வைப்பதில் தான் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத கவுன்சிலர்கள் தற்போது இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் எப்போது திறக்கும் என்று தெரியவில்லை. பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட சரக்கு முனையத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அது பயன்பாட்டுக்கு வரவில்லை. 2.85 கோடி மதிப்பில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் சீரமைக்கப்பட்டது என்று கூறினார்கள். ஆனால் வெறுமனே பெயிண்டிங் மட்டும் அடித்து முடித்து விட்டனர். தற்போது அதில் தூண் பகுதி இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து விட்டார். எது எப்படியோ தற்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிமுக கவுன்சிலர்கள் நிச்சயமாக ஆதரவு அளிப்பார்கள். மாநகராட்சி கமிஷனர் உடனடியாக இந்த மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சியை முடக்கி வைத்து உடனடி தீர்வு காண வேண்டும். இல்லையெனில் சங்கரன்கோவில் நகராட்சியில் நடப்பது போல குதிரை பேரத்துக்கு வழிவகுத்து விடும். சுமார் ஆறு லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மாநகராட்சியின் நலனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள திமுக அரசின் மாநகராட்சியை கலைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


குறிப்பாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் மீது 21 நகர் மன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம்   (07.12.202 ) நகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் எனவும், நகர்மன்ற கூட்டத்தில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் அறிவித்திருந்தார்.  அதன் அடிப்படையில் இன்று சங்கரன்கோவில் நகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் போதிய அளவில் 24 நகர மன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் இன்று நடைபெற இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு தோல்வியுற்றதாக நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் அறிவித்தார். இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் மற்றும் நிர்வாகத்தை கண்டித்து 13 அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.