நெல்லை மணப்படை வீடு ஊரைச் சேர்ந்தவர் சுருளி ராஜன். வயது 42. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று தனது சொந்த பணி காரணமாக பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரி அருகில் காரில் வந்து பணியை முடித்து விட்டு திரும்பும் போது இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் சுருளி ராஜனை அங்கேயே சரமாரியாக வெட்டி வீழ்த்தியது. பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுருளிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுருளி ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுருளிராஜன் கொலை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதோடு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதோடு சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கொலை தொடர்பான விசாரணையை காவல்துறையினர் தொடங்கினர். கொலை நடந்த இடங்களில் வேறு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா எனவும் காவல்துறையினர் அப்பகுதியில் தேடி வந்தனர். மேலும் நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையர் ஆதர்த் பச்சேரா சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டார். இக்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சுருளிராஜன் கொலை செய்யப்பட்ட பகுதி திருநெல்வேலி- தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலை பகுதி என்பதால் எப்போதும் அங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அதோடு அருகிலேயே அரசு சட்டக்கல்லூரியும், நீதிமன்றமும் உள்ளது. இவ்வாறு ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் சுருளிராஜன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நேற்று இரவு ராஜவல்லிபுரத்தில் கொலை சம்பவமும், இரு தினங்களுக்கு முன்பு நெல்லை இராமையன்பட்டியில் கோவில் திருவிழாவிற்கு வந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதேபோன்று அன்றே நெல்லை மாவட்டம் பிரான்சேரி அருகில் சந்தேகத்திற்குரிய மரணம் என தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதோடு குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.