நெல்லை பள்ளிக்கட்டட விபத்து - பொய்யான தகவல்களுக்கு அதிகாரிகள் உறுதி சான்று வழங்கியது அம்பலம்

"கழிப்பறை சுவர் விழுந்து மாணவர்கள் பலியான சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம் மட்டுமின்றி அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையும் முக்கிய காரணம் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்"

Continues below advertisement

கடந்த 17ஆம் தேதி நெல்லை டவுண் சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 மாணவர்கள் உயிர் இழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  மாணவர்கள் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் பள்ளி குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. விபத்து ஏற்பட்ட அன்று நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்து பார்த்தபோது கழிப்பறை சுவருக்கு அஸ்திவாரம் இல்லை என குற்றச்சாட்டை முன்வைத்தார், அதே போல நெல்லை மாவட்ட ஆட்சியர்  செய்தியாளர்களை சந்திக்கும்போதும் பள்ளி கழிப்பறையை இடிந்து விழுந்ததற்கு அடித்தளம் இல்லை என்பதே முதற்கட்ட தகவலாக இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார், இந்நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் பள்ளிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரச் சான்று அளித்துள்ளனர்.

Continues below advertisement

இந்த சுகாதார சான்றுக்கு தேவையான உறுதித்தன்மை சான்று தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று போன்றவை சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாக நெல்லை மாநகராட்சி சுகாதார பிரிவு வழங்கிய சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளிக்கு தீயணைப்பு துறை சார்பில் தடையில்லாச் சான்று கடந்த ஜனவரி மாதமும், வருவாய்த்துறை சார்பில் மூன்று வருட செல்லுபடியாகும் வகையிலான கட்டிட சான்றும் கடந்த 2019ஆம் ஆண்டும் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆய்வு எவ்வாறு நடைபெற்றது, எதன் அடிப்படையில் இந்த சான்றுகள் வழங்கப்பட்டன. அவ்வாறு முறையான ஆய்வு நடத்தப்பட்டிருந்தால் ஏன் இந்த விபத்து நடைபெற்றது என பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.  


அதே போல வருவாய்த் துறை சார்பில் ஆய்வு செய்த தாசில்தார் பள்ளியில் 650 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர் சான்று அளித்து உள்ளார், ஆனால் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழி பிரிவில் 1484 பேர் ஆங்கில வழி பிரிவில் 1236 பேர் என மொத்தம் 2720 பேர் பயில்வதாக  புள்ளிவிவரம் தெரிவிக்கிறது,


அதிகாரிகளால் உறுதித்தன்மை சான்றிதழ் வழங்கப்பட்ட  ஒரு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பையும், பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஆய்வின் தன்மை குறித்து விரிவான புள்ளி விவரங்கள் பதிவு செய்யாமல் சான்றிதழ் அளித்து உள்ளது அம்பலமாகி  உள்ளது.


இந்த விபத்திற்கு பள்ளி நிர்வாகம் மட்டுமே முழு பொறுப்பு என்றில்லாமல் சான்றிதழ் வழங்கிய பல துறை அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும், இந்த  விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளடங்கிய சிறப்பு குழு அமைத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த நிலையில் ஆய்வு குழுவினர் விரைவாக அறிக்கை சமர்பிப்பதன் அடிப்படையில் இதில்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சமூக வலை தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

Continues below advertisement