நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் செல்லதுரை. இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் மாவட்ட முழுவதும் உள்ள காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லதுரை மாற்றப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவ விடுப்பில் இருக்கும் தன்னை எந்த காரணமும் இன்றி சொந்த மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்திற்கு மாற்றியதாக புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தமிழக முதல்வருக்கு தனது கோரிக்கையை தெரிவித்து வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும் பொழுது, நான் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறேன். ஆனால் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளேன். அப்படி இருக்கும் போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்த நடவடிக்கைகள் இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு எனது மனநிலை உள்ளது எனவும் பேசியுள்ளார், எனவே தமிழக முதல்வர் தான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும், மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே திருநெல்வேலியிலேயே பணியமர்த்தி தன்னை காப்பாத்துமாறும் கோரிக்கை விடுத்து வீடியோ காட்சியில் பதிவிட்டுள்ள சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்