திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பாபநாசம் பொதிகை மலையில் அமைந்துள்ளது பாண தீர்த்தம் அருவி. இந்த அருவிக்கு செல்ல வேண்டும் என்றால்  அணைக்கட்டு வழியாக வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியாக 20 நிமிடம் படகில் சென்று அங்கிருந்து 10 நிமிடம் மலையேறி தான் செல்ல முடியும். கடந்த 10 வருடத்திற்கு முன்பு வரை மக்கள் படகில் பயணம் செய்து தான் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் அருவிக்கு செல்ல பல்வேறு பாதுகாப்பு காரணங்களை கூறி அதற்கு தடை விதித்திருந்தது வனத்துறை. இதனால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் சேதமான நிலையில் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் மீண்டும் படகு போக்குவரத்தை துவக்க வேண்டும்.. அருவிக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். 


இந்த சூழலில் தான் வனத்துறையின் சார்பில் மீண்டும் பாண தீர்த்த அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் முண்டந்துறை பகுதியில் அமைந்துள்ள பாணதீர்த்தம் அருவியை வருகிற 18-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏதுவாக 10 இருக்கைகள் கொண்ட காரில் நபர் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் நுழைவு சீட்டு முண்டந்துறை வனச்சரகத்தில் பெற்றுக் கொண்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிடுவதற்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது காரில் இருந்தவரே பாணதீர்த்த அருவியை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது படகில் சென்று பார்ப்பதற்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.


வனத்துறையின் இந்த அனுமதி 10 ஆண்டுகள் கழித்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் வாகனத்தில் இருந்தபடியே பார்க்கும் வசதிக்கு 500 ரூபாய் கட்டணம் என்பது மிக மிக அதிகம். பட்டப்பகல் கொள்ளையாக இருக்கிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 நபர் செல்ல வேண்டும் என்றால் ஒரு மாத வீட்டுச் செலவிற்கான தொகை என ஏழை, எளிய நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். ஏற்கனவே வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சுற்றுலா பயணிகளை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக மணிமுத்தாறு சோதனை சாவடியில் இருந்து மாஞ்சோலை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்ல கட்டணம் வசூல் செய்வது, அகஸ்தியர் அருவிக்கு செல்ல கட்டணம் வசூல் செய்வதால்  பாபநாசம் சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நிலை இருக்கிறது. அதே போல சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது என வனத்துறையின் நடவடிக்கைகளால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் போராட்டங்களும் நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் தான் பாண தீர்த்த அருவிக்கு 500 ரூபாய் கட்டணம் என்பது மக்களிடையே கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர். இது தொடர்பாக பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் களக்காடு முண்டந்துறை வனத்துறையை கண்டிக்கிறோம்.. ஆலயத்திற்கு செல்ல ஆயிரம் கட்டுப்பாடுகள்.... ஆனால் நீரே இல்லாத நீர் தேக்கத்தை சுற்றி பார்க்க 500 ரூபாய் கட்டணமா என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.