திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூன்றடைப்பு அன்பு நகர் பகுதியைச் சார்ந்த முப்பிடாதி, சீதா, கோமதி, சக்தி பிரியா ஆகியோர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 12. 02. 2023 அன்று இரவு 10.45  மணிக்கு டி எம் 74 எண் 2067 என்ற பேருந்தில் பயணம் செய்துள்ளார்கள். ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர்களும் மூன்றடைப்புக்கு பயண டிக்கெட் கேட்டுள்ளார். நடத்துனர் மூன்றடைப்பில் பேருந்து நிற்காது என்றும் வள்ளியூரில் தான் பேருந்து நிற்கும் என்று வாக்குவாதம் செய்து வள்ளியூர் பயண கட்டணமாக  மூன்று முழு டிக்கெட்டும், ஒரு அரை டிக்கெட்டும் ரூபாய் 122/-பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்கியுள்ளார். பேருந்தானது மூன்றடைப்பு பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதற்கு வழித்தட அனுமதி இருந்தும் மூன்றடைப்பில் பேருந்து   நிற்காது என நடத்துனர் வாக்குவாதம் செய்துள்ளார்.


முப்பிடாதியும் நாகர்கோவில் டிப்போ கிளை மேலாளரை தொடர்பு கொண்டு பேருந்து மூன்றடைப்பு நிறுத்தத்தில் நிறுத்த மறுத்த தகவலை தெரிவித்துள்ளார். டிப்போ கிளை மேலாளர் நடத்துனரிடம் மூன்றடைப்பில் பேருந்து நின்று செல்வதற்கு அனுமதி இருப்பதால் மூன்றடைப்பு பேருந்து  நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விடும்மாறு உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் மூன்றடைப்பு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் ஒரு கிலோ மீட்டர்  பேருந்து கடந்து சென்ற பின்னர் நடத்துனர் விசிலடித்து பேருந்தை நிறுத்தி உள்ளார். அங்கு இறங்கிய முப்பிடாதி குடும்பத்தினர் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர்கள் வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.


இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த  நிலையில் வழக்கை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாடஸ் டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடாமல் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பேருந்து சென்ற பின்னர் இறக்கி விட்டது மிகப்பெரிய சேவை குறைபாடு ஆகும். எனவே நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூபாய் 15,000/- வழக்குச் செலவு ரூபாய் 3000/- பேருந்து டிப்போ கிளை மேலாளர் மற்றும் நடத்துனர் ஒரு மாத காலத்திற்குள் மொத்தம்  ரூ.18000/- கொடுக்க வேண்டும். அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க தவறினால் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். பேருந்து  நிறுத்த அனுமதி இருந்தும் அங்கு நிற்காமல் ஒரு கிலோ மீட்டர் கடந்து சென்று பயணிகளை இறக்கிவிட்ட சம்பவத்தால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.