நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது மனக்காவலம் பிள்ளை நகர். இங்குள்ள ஏழாவது வார்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியின் கட்டிடம் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் எனக் கூறி இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் கடந்த வருடம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து  நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பள்ளியை சீரமைக்க உடனடியாக ஒரு கோடி ரூபாயை நிதி அனுமதித்து ஆட்சியர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்டிடங்கள் கட்டும் பணியை ஆரம்பித்து வைத்ததாகவும்  கூறப்படுகிறது.  




ஆனால் பழைய கட்டிடம் மட்டும் முழுவதுமாக இடிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை புதிய கட்டிடத்தின் பணிகள் முழு வீச்சில் தொடங்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கு அருகில் உள்ள சிறிய கட்டிடத்தில் இடநெருக்கடியோடு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் புதிய கட்டுமானம் கட்டுவதற்கு கடந்த ஓராண்டாக தோண்டிய குழியில் நேற்று முன்தினம் ஒரு குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. தொடர்ந்து பல நினைவூட்டல்கள் அனுப்பியும் கட்டிட பணியை தொடங்குவதில் மாவட்ட கல்வித்துறை பொதுப்பணித்துறை மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு விரைவான நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் கோபமடைந்த பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் இன்று  நெல்லை - திருச்செந்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




அப்போது பெற்றோர்கள் கையில் பேனர்களுடன் அதில், கல்வியை பிச்சையாக தாருங்கள் என்ற வசனத்துடன் பாளையங்கோட்டை 7வது வார்டில் ம.பி நகர் காமராஜர் தெருவில் அமைந்துள்ள எங்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு கோடி மதிப்பில் புதுப்பிக்க டெண்டர் ஒதுக்கியும் ஒரு வருடமாக பள்ளியினை தகர்த்த நிலையில் இருக்கிறது. எங்களது கல்வியினை கருத்தில் கொண்டு கல்வியை கற்றுக்கொள்ள பிச்சையாக நினைத்து பள்ளியினை புதுப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, தொடர்ந்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிட்டப்பட்டது. சில மணி  நேர போக்குவரத்து பாதிப்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.  குழந்தைகளின் கல்விக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.