உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் தூய்மை பணியை தனியாருக்கு விடும் அரசாணை 139, 152, 10ஐ ரத்து செய்ய வேண்டும். பல வருடங்களாக சுய உதவி குழுக்கள் மூலம் பணிசெய்யும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம் 730 நிர்ணயம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய அரசை கண்டித்து அனைவரும் கண்டன கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு அனைவரும் வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் சாலை நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் மறியல் போராட்டம் நடத்திய பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். போராட்டம் குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”ஆட்சிக்கு வந்தால் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
தனியாரிடம் லட்சக்கணக்கில் கமிஷன் பெறலாம் என்ற நோக்கத்தில் தான் அரசு இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். தமிழ்நாடே நாறும்” என்று தெரிவித்தார். இப்போராட்டாத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்