மந்தி குரங்குகள் அட்டகாசம்:


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே மந்தி குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கம் என்ற மூதாட்டியையும் அதே ஊரில் கொத்தனார் வேலை பார்த்து வந்த சுதாகர்  என்பவரையும் மந்தி இன குரங்கு வெறித்தனமாக தாக்கியது.  மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கிளாட்சன் என்பவரையும் குரங்கு ஒன்று கடுமையாக வலது கையில் தாக்கியது. தொடர்ந்து காயமடைந்த மூவரையும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குறிப்பிட்ட சில குரங்குகள் ஊருக்குள் அட்டகாசம் செய்து வருவதோடு மிகவும் மூர்க்கமாக மக்களிடம் நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதுடன் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்..


5 பேரை கடித்த நிலையில் கூண்டு வைப்பு:


அதன்படி பொதுமக்களை தாக்கிய குரங்கை பிடிக்க வனத்துறை இணை இயக்குனர் இளையராஜா உத்தரவின் பேரில் கூண்டு வைத்து பிடிக்க முயன்ற நிலையில் கூண்டுக்குள் குரங்குகள் அகப்படாத நிலையில் வன கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் சிவந்திபுரம் பகுதியில் 3 பேரை தாக்கிய இரண்டு குரங்குகளை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட இரண்டு குரங்குகளையும் வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். இருப்பினும் சிவந்திபுரம் கிராம பகுதிகளில் முகாமிட்டுள்ள  மந்திக் குரங்குகள் குடியிருப்பு வாசிகளை தொடர்ந்து தாக்கி வருகிறது. ஏற்கனவே  3 பேர் கடித்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் இருவரை கடித்துள்ளது. இதுவரை ஐந்துக்கும் மேற்பட்டவர்களை மந்தி குரங்குகள் கடித்துள்ளது. மந்தி குரங்கு மூலம் தாக்கப்பட்டவர்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் சிவந்திபுரம் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்து வரும் மந்தி குரங்குகளை பிடிப்பதற்கு கூண்டுகள் அமைத்து, தனி தனி குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




சிறுவர்களை கடிக்கும் சிசிடிவி காட்சியால் பதட்டம்:


ஊருக்குள் உள்ள மரங்கள், வீட்டின் சுவர்களில் அமர்ந்திருக்கும் மந்தி குரங்குகள் தெருவில் நடந்து செல்பவர்களை பாய்ந்து சென்று தாக்குகிறது.  தற்போது இரண்டு சிறுவர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாரம்மன் கோவில் தெருவில் தனது தாயுடன் சாதாரணமாக நடந்து வரும் சிறுவர்கள் சற்றும் எதிர்பாராத நிலையில் சுவரின் மீது அமர்ந்திருந்த மந்தி குரங்கு ஒன்று பாய்ந்து சென்று தாக்குகிறது. இதில் சிறுவர்கள் காலில் மந்தி கடித்தது தெரிகிறது.  எனவே ஊருக்குள் சுற்றி திரியும் மந்திகள் மற்றும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் கொண்டு சென்று விடுவதோடு மீண்டும் அவை ஊருக்குள் வராத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.